தாராசுரத்தில் ஒட்டக்கூத்தரின் 829ஆவது குருபூஜை விழா
By DIN | Published On : 11th September 2019 08:56 AM | Last Updated : 11th September 2019 08:56 AM | அ+அ அ- |

கும்பகோணம் அருகே உள்ள தாராசுரத்தில் ஒட்டக்கூத்தரின் 829ஆவது குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஒட்டக்கூத்தர் என்ற புகழ்மிக்க தமிழ்ப் புலவர் விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன் ஆகிய மூன்று சோழ மன்னர்கள் காலத்திலும் வாழ்ந்தவர். பூந்தோட்டம் என்ற ஊரில் சரஸ்வதி கோயிலை ஒட்டக்கூத்தர் கட்டியதாகவும், அதனால் அவரது பெயராலேயே கூத்தனூர் என்ற பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. ஒட்டக்கூத்தர் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் வீரபத்திர சுவாமியை நோக்கி தக்கயாகபரணி பாடியுள்ளார். பின்னர் இக்கோயிலின் பின்புறத்தில் சமாதி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆண்டுதோறும் ஒட்டக்கூத்தருக்கு இங்கு குருபூஜை நடத்தப்பட்டு வருகிறது.இதன்படி, ஒட்டக்கூத்தரின் 829ஆவது குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு யாகம், வீரபத்திர சுவாமிக்கும், ஒட்டக்கூத்தரின் சமாதிக்கும் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.