கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்துமாநிலப் பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தல்
By DIN | Published On : 29th September 2019 03:42 AM | Last Updated : 29th September 2019 03:42 AM | அ+அ அ- |

கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
தஞ்சாவூரில் இக்கழகத்தின் மாநில மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் மொத்த வருமானத்தில் 6 சதவீத நிதியைக் கல்விக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். மருத்துவம் சார்ந்த எம்.பி.பி.எஸ். படிப்புக்கு நீட் தேர்வையும், மருத்துவப் மேல் படிப்புக்கு நெக்ஸ்ட் தேர்வையும் ரத்து செய்து பிளஸ் 2 தேர்வு மற்றும் எம்.பி.பி.எஸ். தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை மேற்கொள்ள வேண்டும்.
மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழுவின் அடிப்படையில் பல்கலைக்கழக மற்றும் ஆசிரியர்களுக்கான பல்கலைக்கழக மானியக் குழு ஊதியத் திருத்தத்தை அனைத்து மாநிலங்களும் முழுமையாக அமல்படுத்துவதற்கு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நூறு சதவீதம் நிதி உதவி அளிக்க வேண்டும்.
ஓய்வூதியர்கள் பெறும் ஓய்வூதியம் வாழ்வூதியம் என்பதால் இந்த வருமானத்துக்கு முழுமையான வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கழகத் தலைவர் டி.என். கோகுல்நாத் பாபு தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் என். ராசேந்திரன் தொடங்கி வைத்தார்.
பல்கலைக்கழக ஓய்வூதியர் சங்கத் தலைவர் பக்கிரிசாமி, அகில இந்திய ஓய்வு பெற்ற பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கப் பொதுச் செயலர் பி. பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.