பூண்டி மாதா பேராலயத்தில் கிரீடம், நெக்லஸ், ஜெபமாலை திருட்டு
By DIN | Published On : 29th September 2019 03:37 AM | Last Updated : 29th September 2019 03:37 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள பூண்டி மாதா பேராலயத்தில் மாதா சிலையில் இருந்த கிரீடம், நெக்லஸ், ஜெபமாலை ஆகியவற்றை திருடிச் சென்றவரை போலீஸார் தேடுகின்றனர்.
இப்பேராலயத்துக்கு நாள்தோறும் நம் நாட்டினர் மட்டுமல்லாமல், அயல் நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.
மேலும், வேண்டுதலுக்காக ஏராளமானோர் தங்கம், வெள்ளி உள்ளிட்ட காணிக்கைப் பொருட்களை மாதாவுக்கு செலுத்தி வருகின்றனர்.
மாதாவுக்கு 15 ஆண்டுக்கு முன்பு தங்க முலாம் பூசப்பட்ட கிரீடமும், மூன்றரை பவுன் ஜெப மாலையும் பக்தர்களால் அணிவிக்கப்பட்டது. அண்மையில் ஒரு பக்தர் வழங்கிய நான்கு பவுன் நெக்லசும் அணிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல இரவு வழிபாடு முடிந்த பிறகு பேராலயத்தின் கதவுகள்பூட்டப்பட்டன.
சனிக்கிழமை அதிகாலை 4.50 மணிக்கு வழிபாட்டுக்காக ஆலயத்தின் கதவுகள் திறக்கப்பட்டபோது உள்ளே மாதா சொரூபம் வைக்கப்பட்டிருந்த இடத்தின் கதவுகள் நெம்பி திறக்கப்பட்டுக் கிடந்தன.
மேலும், மாதாவுக்கு அணிவிக்கப்பட்டிருந்த கிரீடமும், கழுத்தில் இருந்த நெக்லசும், கையில் இருந்த ஜெபமாலையும் திருடு போயிருப்பது தெரிய வந்தது.
தகவலறிந்த திருக்காட்டுப்பள்ளி போலீஸார் பேராலயத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், பேராலயத்தில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது வியாழக்கிழமை (செப்.26) சந்தேகத்துக்கிடமான வகையில் அடையாளம் தெரியாத நபர் நடமாடியதும், வெள்ளிக்கிழமை இரவு வழிபாட்டின்போது பேராலயத்தின் உள்ளே புகுந்து பாதிரியார்கள் உடை மாற்றும் அறையில் ஒளிந்ததும், கேமராக்களை துணி போட்டு மூடுவதும் தெரிய வந்தது.
இதன் அடிப்படையில் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.