

தஞ்சாவூர் பெரியகோயிலை பார்த்து உலகமே வியக்கிறது. இதைக் காண வெளிநாடுகளிலிருந்தும் வருகின்றனர். இக்கோயிலை எத்தனை முறை பார்த்தாலும், ஒவ்வொரு முறையும் புது புது தகவல்கள் கிடைக்கும். அந்த அளவுக்கு நுட்பங்களும், விந்தைகளும் கொட்டிக் கிடக்கின்றன. எனவே, இக்கோயில் குறித்த ஆராய்ச்சிக்கு முடிவே கிடையாது. தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இத்தகைய பெரும் சிறப்புகளைக் கொண்ட இக்கோயில் குறித்து ஏராளமான, உண்மையிலான அறிவியல் ரீதியான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், அதையெல்லாம் விட இக்கோயில் குறித்த கட்டுக்கதைகளே அதிகம். அவைதான் மக்களிடத்தில் நீக்கமற நிறைந்து கிடக்கிறது. ஆனால், இவையெல்லாம் உண்மையல்ல.
நந்தி வளர்கிறதா?
தஞ்சாவூர் பெருவுடையார் சன்னதி முன் உள்ள நந்தி குறித்து பல்வேறு கட்டுக்கதைகள் உலா வருகின்றன. ராஜராஜசோழன் காலத்தில் ஒரே கல்லால் நந்தி உருவாக்கப்பட்டது என்றும், அந்த நந்தி உருவத்தில் தேரை இருப்பது அறிந்து, அதைத் தவிர்த்து இந்தப் பெரிய நந்தியை உருவாக்கினான் எனவும் கூறுவர். மேலும், இந்தப் புதிய நந்தி ஒவ்வொரு நாளும் வளர்வதாகவும், அதனால் அதன் தலை மீது ஒரு பெரிய ஆணியை அடித்து அதன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தினர் எனவும் கூறுவதுண்டு. ஆனால், இவையெல்லாம் கற்பனைக் கதைகளே. மாமன்னன் ராஜராஜசோழன் வடித்த நந்தி தற்போது வாராஹி கோயிலின் அருகே திருச்சுற்று மாளிகையில் உள்ளது. இது, பிற்காலத்தில் இடம்பெறச் செய்யப்பட்டது.
தற்போது பெருவுடையார் சன்னதி முன் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட மிகப்பெரிய நந்தி நாயக்கர்களால் வடிவமைக்கப்பட்டது. இந்த நந்தியின் உயரம் 12 அடி. நீளம் பத்தொன்பதரை அடி. அகலம் எட்டேகால் அடி. இது வளர்வது இல்லை என்பது மட்டுமல்ல; அது அப்படியேதான் இருக்கிறது என்பதே உண்மை.
நிழல் சாயுமா?
கருவறைக்கு மேலாக உள்ள ஸ்ரீ விமானத்தைக் கோபுரம் எனக் குறிப்பிட்டு, அதன் நிழல் ஒரு போதும் கீழே சாயாது எனக் கூறுவர். சிலர் மேலேயுள்ள சிகரம், கலசம், நந்தி ஆகியவற்றின் நிழல் மட்டும் தரையில் விழாது என்றும், அவை கோபுரத்தின் மேலேயே விழும் எனவும் கூறுவர். இத்தகைய கூற்றுகள் அனைத்தும் தவறானவை. இக்கோயில் விமானத்தின் கலசம், சிகரம், கீர்த்தி முகம், நந்திகள், நெடிதுயர்ந்த கட்டுமானம் ஆகிய அனைத்தின் நிழலும் எல்லாக் காலங்களிலும் தெளிவாகத் தரையில் விழும் என்பதே உண்மை.
இதேபோல, இக்கோயில் கோபுரத்தின் நிழல் நண்பகல் 12 மணிக்கு தரையில் விழாது எனக் கூறுவர். ஆனால், நம் நிழலே நண்பகல் 12 மணிக்கு தரையில் விழாது. நம் மீதே அந்நிழல் விழும். அதுபோல, இக்கோபுரத்தின் நிழல் நண்பகல் 12 மணியின்போது அதன் மீதே விழுவதால், கீழே நிழல் தெரிவதில்லை.
கோபுரத்தில் ஐரோப்பியர் உருவம்
பெரியகோயில் கோபுரத்தின் இரண்டாம் நிலையில் மார்பளவு உடைய ஒரு மேலை நாட்டார் உருவம் தொப்பி அணிந்த நிலையில் காணப்படுகிறது. இதுகுறித்து பல்வேறு கற்பனைக் கதைகள் உலவுகின்றன. குறிப்பாக, ராஜராஜனின் சிற்பிகள் எதிர்காலத்தில் ஐரோப்பியர் ஆட்சி தமிழகத்தில் நிலவும் என்பதை முன்பே அறிந்து இச்சிற்பத்தை வைத்துள்ளனர் எனக் கூறுவர்.
ஆனால், இந்த ஐரோப்பியர் உருவம் தஞ்சாவூர் நாயக்கர் காலத்துத் திருப்பணியின்போது இடம்பெற்றது. இந்த உருவம் சுண்ணாம்புக் காரையால் (சுதை) செய்யப்பட்டது. கி.பி. 1620 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தஞ்சாவூர் நாயக்க மன்னர் ரகுநாத நாயக்கருக்கும், டேனிஷ் அரசருக்கும் நெருங்கிய நட்பு இருந்தது. டேனிஷ் அரசருக்கு ரகுநாத நாயக்கர் தங்க ஓலையில் தமிழில் எழுதிய நட்புறவுக் கடிதம் அனுப்பினான். இது, இப்போது கோபன்கேஹனில் காட்சிப் பொருளாக உள்ளது. தரங்கம்பாடியில் டேனிஷ் நாட்டவருக்கு வணிக மையம் அமைக்க ரகுநாத நாயக்கர் அனுமதி அளித்ததால், அந்நாட்டவர் சிலர் அடிக்கடி தஞ்சாவூருக்கு வரும் வாய்ப்பு ஏற்பட்டது. அக்காலகட்டத்தில் திருப்பணிகள் நிகழ்ந்ததால் சிற்பி ஒருவன், தான் பார்த்த ஐரோப்பியர் உருவத்தைத் தொப்பியுடன் இக்கோபுரத்தில் படைத்துள்ளான்.
அழகி கொடுத்த கல்லா?
ஸ்ரீவிமானத்தின் உச்சியை மூடும் கற்களை பிரமரந்திரக் கல் எனக் குறிப்பிடுவர். தஞ்சை பெரியகோயிலின் உச்சியில் உள்ள சிகரம் பிரமரந்திரக் கல்லின் மேல் உள்ளதாகவும், அது அழகி என்ற கிழவி வைத்திருந்த கல் என்றும், அதன் நிழலில்தான் ஈசன் இருப்பேன் எனவும் ராஜராஜனின் கனவில் கூறவே, அவ்வாறே அக்கல் அங்கு ஏற்றப்பட்டதாகக் கூறுவர். ஆனால், இது புனைவு செய்யப்பட்ட கதையே.
ஒரே கல்தானா?
பெரியகோயில் கோபுரத்தின் (ஸ்ரீவிமானம்) மேல் உள்ள பந்து போன்ற சிகரக்கல் ஒரே கல் என்றும், அது 80 டன் எடையுடையது எனவும், தஞ்சாவூருக்கு வடகிழக்கே உள்ள சாரப்பள்ளம் என்ற ஊரில் இருந்து மண்ணால் சாய்வு தளம் ஏற்படுத்தி அதன் வழியே இக்கல் யானையின் துணையுடன் இழுத்து வரப்பட்டது எனவும் சுவையான கதை கூறுவதுண்டு. ஆனால், இது உண்மைக்குப் புறம்பானது. கோபுரத்தின் மீது உள்ள சிகரம், பல கற்களை இணைத்து உருவாக்கப்பட்டது. 80 டன் எடை என்பதும் தவறு. அது 16 துண்டுக் கற்களை கொண்டு மிகவும் நுட்பமாக இணைக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.
சாரப்பள்ளம் என்ற இடம் தஞ்சாவூரில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள வயலூர் என்ற ஊரில் உள்ளது. அங்கிருந்து சாரம் என்பது சாத்தியமில்லாதது. மிகக் குறைந்த கோணத்தில் சாய்வுதளம் ஏற்படுத்தினால்கூட கோயில் வளாகமே போதுமானது. சுருள் சாய்வுதள அமைப்பில்தான் கட்டுமானக் கற்களை மேலே எடுத்துச் சென்றிருக்க வேண்டும் எனவும் கட்டடக் கலை வல்லுநர்கள் கூறுகின்றனர். அவ்வாறு இருந்த சுருள் சாய்வுதள மண் தற்போது பெரியகோயிலுக்குத் தென்புறம் ஒன்றரை கி.மீ. தொலைவு வரை நீண்ட மேடாகக் காட்சி அளிக்கிறது. மேலும், இந்தப் பாறை வடிவம் பல கற்களை இணைத்து உருவாக்கப்பட்டது. இருந்தாலும் ஒரே கல் போன்று தோற்றமளிக்கும் வகையில் அவ்வளவு நேர்த்தியாக இவை கோர்க்கப்பட்டிருப்பது வியப்புக்குரியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.