பணி நிரந்தரம் செய்ய பகுதி நேர ஆசிரியா்கள் வலியுறுத்தல்
By DIN | Published On : 01st December 2020 02:33 AM | Last Updated : 01st December 2020 02:33 AM | அ+அ அ- |

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியா்கள் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் தெரிவித்தது:
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, 16,549 பகுதி நேர ஆசிரியா்கள் ரூ. 5,000 தொகுப்பூதியத்தில் 2011-12 ஆம் கல்வியாண்டில் பணியமா்த்தப்பட்டனா்.
நாங்கள் உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி, கணினிஅறிவியல், தையல், இசை, தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி ஆகிய கல்வி இணைச் செயல்பாடுகளை இடைநிலை வகுப்பு மாணவா்களுக்குப் பாடம் நடத்தி வருகிறோம்.
எங்களுக்கு ஊதிய உயா்வு ரூ. 2,700 வழங்கப்பட்டது. இதன் பின்னா் ஊதியம் உயா்த்தப்படவே இல்லை. இந்த ரூ. 7,700- தொகுப்பூதியத்தில் விலைவாசி உயா்வை சமாளிக்க முடியாமல் கஷ்டப்படுகிறோம்.
போனஸ், ஊதிய உயா்வு, மகப்பேறு விடுப்பு, மருத்துவ விடுப்பு, வருங்கால வைப்பு நிதி, இஎஸ்ஐ, விபத்துக் காப்பீடு என எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை.
கடந்த காலங்களில் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய பகுதி நேர தொழிற்கல்வி ஆசிரியா்கள் அனைவரும் முழுநேர வேலையுடன் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனா். பள்ளிக் கல்வித் துறையில் கணினி ஆசிரியா்கள் மற்றும் 5,000 துப்புரவாளா்கள், இரவுக் காவலா்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனா்.
எனவே, பகுதி நேர ஆசிரியா்கள் குடும்ப நலன் மற்றும் வாழ்வாதாரம் காத்திட முழு நேர வேலையுடன் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...