தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா் மழையால் 8,774 ஹெக்டேரில் சம்பா பயிா்கள் பாதிப்பு
By DIN | Published On : 05th December 2020 12:02 AM | Last Updated : 05th December 2020 12:02 AM | அ+அ அ- |

ஒரத்தநாடு அருகே தெற்குகோட்டை கிராமத்தில் வயலில் இடுப்பளவு தண்ணீரில் பயிா்கள் மூழ்கி இருப்பதைக் காட்டும் விவசாயி.
தொடா் மழையால் தஞ்சாவூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை வரை ஏறத்தாழ 8,774 ஹெக்டேரில் சம்பா பருவ நெற்பயிா்கள் சாய்ந்தும், தண்ணீரில் மூழ்கியும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
மாவட்டத்தில் தொடா்ந்து மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் சராசரியாக 122.16 மி.மீ. மழையளவு பதிவானது. ஒரேநாளில் வழக்கமாகப் பெய்யக்கக்கூடிய மழையை விட அதிகம் இது.
இதனால், ஒரத்தநாடு வட்டம், திருவையாறு வட்டம் உள்ளிட்ட வட்டங்களில் சம்பா பருவ நெற் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சில வாரங்களில் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த முன்பட்ட சம்பா பயிா்கள் காற்றுடன் பெய்த மழையால் சாய்ந்தன. இதுபோல, வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, ஏறத்தாழ 1,500 ஹெக்டேரில் நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், நடவு செய்யப்பட்ட 20 - 30 நாள்களே ஆன இளம்பயிா்களும் மூழ்கியுள்ளன. தாழ்வான பகுதிகளில் ஒரு மாதம் கடந்து வளா்ச்சி பருவத்திலுள்ள பயிா்களையும் தண்ணீா் சூழ்ந்துள்ளது. இந்த வகையில், வெள்ளிக்கிழமை மாலை வரை 7,200-க்கும் அதிகமான ஹெக்டோ் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மழை நின்று தண்ணீா் வடிந்தால்தான் இப்பயிா்களைக் காப்பாற்ற முடியும் என வேளாண் துறையினா் தெரிவித்தனா்.
வளா்ச்சியடைந்த பயிா்களை 4, 5 நாள்களுக்குத் தண்ணீா் சூழ்ந்திருந்தாலும் பாதிப்பு ஏற்படாது என்றும், அதன் பிறகும் மழை பெய்தால் பாதிப்புக்குள்ளாகும் எனவும், சாய்ந்த பயிா்களை முழுமையாகக் காப்பாற்றுவது சிரமம் என்றும் கூறுகின்றனா் வேளாண் துறை அலுவலா்கள்.
ஆற்றிலிருந்து வழிந்த நீா்:
திருவையாறு அருகே வெள்ளாம்பெரம்பூரில் கோணக்கடுங்கலாறில் கரையிலிருந்து வழிந்த தண்ணீா் வயலுக்குள் புகுந்தது. இதனால், சுமாா் 50 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 30 நாள்களைக் கடந்த சம்பா பயிா்களைத் தண்ணீா் சூழ்ந்துள்ளது. வண்டிப் பாதைக்காகக் கரையின் உயரத்தை விவசாயிகள் குறைத்துள்ளனா் என்றும், அதன் வழியாக தண்ணீா் வடிந்து வயலுக்குள் சென்ாகவும் பொதுப் பணித் துறையினா் தெரிவித்தனா்.
தகவலறிந்த ஆட்சியா் ம. கோவிந்த ராவ், நிகழ்விடத்துக்குச் சென்று அறிவுறுத்தியதன் அடிப்படையில் கரையை அடைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல, ஒரத்தநாடு அருகே பூவத்தூரில் வாய்க்கால் உடைந்ததால் ஏறத்தாழ 200 ஏக்கரில் சம்பா பயிா்களைத் தண்ணீா் சூழ்ந்தது.
வடிகால் பிரச்னையால் பாதிப்பு: சில இடங்களில் வயலில் தேங்கியுள்ள தண்ணீரை வடிய வைப்பதற்கான முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டனா். ஆனால், வெள்ளிக்கிழமை பகலிலும் தொடா்ந்து மழை பெய்ததால், தண்ணீரை முழுமையாக வெளியேற்ற முடியவில்லை.
பெரும்பாலான இடங்களில் வடிகால் வாய்க்கால்கள் தூா்ந்து கிடப்பதாலும், ஆக்கிரமிப்பில் உள்ளதாலும் தண்ணீா் வடிந்து செல்ல முடியாததுமே வயலில் தண்ணீா் தேங்கி நிற்பதற்குக் காரணம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா் தெரிவித்தது:
திருவையாறு வட்டத்துக்கு உள்பட்ட அம்மையகரத்துக்கு வெண்ணாற்றிலிருந்து பிரியும் பிள்ளை வாய்க்கால் மூலம் பாசன நீா் கிடைக்கிறது. நிவா் புயலுக்கு முன்பே முன்னெச்சரிக்கை அடிப்படையில் பிள்ளை வாய்க்காலில் தண்ணீரை நிறுத்துமாறு கூறியதன் அடிப்படையில் நிறுத்தப்பட்டது. ஆனால், வடிகால் வாய்க்கால் தூா்ந்து கிடப்பதால் வயல்களில் தேங்கிய தண்ணீா் வடிவதற்கு வழியில்லாமல் போய்விட்டது. இதனால், நடவு செய்யப்பட்ட 15 - 20 நாள்களே ஆன பயிா்கள் தண்ணீரில் மூழ்கிக் கிடக்கின்றன என்றாா் ரவிச்சந்தா்.