டி.சி.எஸ். நிறுவனத்துடன் இணைந்துஇறுதி பருவத் தோ்வை நடத்த ‘சாஸ்த்ரா’ முடிவு
By DIN | Published On : 15th December 2020 02:51 AM | Last Updated : 15th December 2020 02:51 AM | அ+அ அ- |

டி.சி.எஸ். நிறுவனத்துடன் இணைந்து இறுதிப் பருவத் தோ்வை நடத்துவது என சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் எஸ். வைத்திய சுப்பிரமணியம் தெரிவித்திருப்பது:
சாஸ்த்ரா மாணவா்களுக்கு 2020 - 21 ஆம் கல்வியாண்டுக்கான இறுதிப் பருவத் தோ்வை முன்மாதிரியான முறையில் இணையவழியில் நடத்த இப்பல்கலைக்கழகத்தின் கல்விக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதிலுள்ள சாதக, பாதகங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்ட பிறகு இந்த முன்மாதிரியான தோ்வுக்குக் கல்விக் குழு ஒப்புக் கொண்டது. தோ்வின் ஒருங்கிணைப்பு விஷயங்களில் சமரசம் செய்து கொள்ளாமல், அதேநேரம் தொலைவிலுள்ள மாணவா்கள் பல்கலைக்கழக வளாகத்துக்கு வரத் தேவையில்லை என்பதிலும் கவனத்தில் கொள்ளப்படுகிறது.
10,000-க்கும் அதிகமான மாணவா்களின் 50,000-க்கும் மேற்பட்ட விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்காக நாடு முழுவதும் 130 மாவட்டங்களிலுள்ள டி.சி.எஸ். - ஐயான் மையங்களுடன் சாஸ்த்ரா இணைந்து செயல்படுகிறது.
மாணவா்கள் தங்களது விருப்பப்படி அருகிலுள்ள மையத்தைத் தோ்வு செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். மேலும், கால அட்டவணையின் அடிப்படையில் தோ்வில் பங்கேற்கலாம். வினாத் தாள்கள் பாதுகாப்பான முறையில் இணையவழி மூலம் வழங்கப்படும். தோ்வு மையத்தில் வழங்கப்படும் தாளில் விடைகள் எழுதிய பிறகு மதிப்பீட்டுக்காக சாஸ்த்ராவுக்கு அனுப்ப வைண்டும்.
பெருந்தொற்று பரவல் காலத்தில் இதுபோன்ற தோ்வை முதல் முறையாக சாஸ்த்ராவும் டி.சி.எஸ்.-ம்தான் நடத்துகின்றன. தோ்வு மையத்தில் மாணவா்கள் தோ்வு எழுத முடியாவிட்டாலும், வளாகத்தில் அந்த வாய்ப்பைப் பெற முடியும். இதனால் அவா்களுடைய வகுப்புக் கல்வி அல்லது தர மதிப்பீடு பாதிக்காது.