ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர் சேமிப்புத் திட்டம்
By DIN | Published On : 05th February 2020 05:45 AM | Last Updated : 05th February 2020 05:45 AM | அ+அ அ- |

இயற்கையின் கொடையான மழைநீரை வீணாகக் கடலில் கலக்காமல், அதை ஏரி, குளங்களில் தேக்கிப் பயன்படுத்தும் பழக்கம் தமிழகத்தில் தொன்றுதொட்டு இருந்து வருகிறது.
ஒரு கட்டடத்தில் பெய்யும் மழை நீர் முழுவதையும் வீணாக்காமல் சேமித்து பயன்படுத்தும் முறையை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செய்து காட்டியவர் மாமன்னன் ராஜராஜசோழன். அது, ராஜராஜேச்சரம் என்கிற தஞ்சை பெரியகோயிலில் செய்யப்பட்டுள்ளது.
திருமதில்கள், திருச்சுற்று மாளிகை, 216 அடி உயர ஸ்ரீவிமானம் உள்ளிட்டவற்றுடன் கூடிய இக்கோயில் 240 மீட்டர் நீளமும், 120 மீட்டர் அகலமும் பரப்பளவு கொண்டது. இக்கோயிலை கட்டிய ராஜராஜசோழன் விமானம் உள்ளிட்டவற்றின் மீது விழும் மழை நீர் முழுவதும் ஒருங்கே திரண்டு, கால்வாய் வழியாக ஓடி, வட மேற்கு மூலையில் உள்ள குளத்துக்குச் சென்றடையும் விதமாக அமைத்துள்ளார். இதற்கு சிவகங்கை எனப் பெயரிட்டு போற்றினார்.
அந்த மிக உயர்ந்த விமானத்தில் விழும் மழைநீர் ஒவ்வொரு தளத்திலும் சேர்ந்து ஆங்காங்கே உள்ள வடிகால் வழியாக வழிந்து கீழ்த்தளத்தில் வந்து சேரும். நீர் வழிந்து வருகிற பகுதியில் துரோணிகள் உள்ளன.
இதுபோல, கோயில் வளாகம் முழுவதும் சேகரமாகும் மழை நீர் ஒன்றாகத் திரண்டு கால்வாய் வழியாகச் சிவகங்கை குளத்தில் விழும். பலத்த மழை பெய்தாலும், நின்ற பிறகு பார்த்தால் 15 நிடமிங்களில் தண்ணீர் வெளியேறிவிடும். அந்த அளவுக்கு தள அமைப்பும், கால்வாய் வடிவமைப்பும் உள்ளன.

இதுகுறித்து வரலாற்று ஆய்வாளரும், தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத் தமிழ் பண்டிதருமான மணி. மாறன் தெரிவித்தது:
ராஜராஜ சோழன் தனது ஆளுகைக்கு உட்பட்ட நிலங்களை வளப்படுத்த குளங்கள், ஏரிகளை வெட்டினார். இதேபோல, மக்களின் குடிநீர்த் தேவைக்காகப் பெரியகோயில் அருகே சிவகங்கை குளத்தை வெட்டி வைத்தார்.
பெரியகோயிலில் மழையின்போது கிடைக்கும் தண்ணீரை வீணாக்காமல் சேமித்து பயன்படுத்தும் விதமாக கோயிலின் வடபுறத்தில் நீர் போக்கும் வழி எனப்படும் சாலவம் என்கிற வடிகால் அமைப்பை கருங்கற்களைக் கொண்டு அமைத்தார். இதில், தண்ணீரைத் தடுத்து அனுப்பும் முறை உள்ளது.
முதலில் பெய்யும் மழை நீர் அழுக்காக இருக்கும் என்பதால், அதை நந்தவனத்துக்குச் செல்லும் விதமாக ஒரு சாலவத்தை அமைத்தார். சிறிது நேரம் கழித்து கிடைக்கும் சற்று தெளிவான நீரை முதல் சாலவத்தை அடைத்துவிட்டு, சிவகங்கைக் குளத்துக்குக் கொண்டு சேர்க்கும் விதமாக இரண்டாவது சாலவம் அமைக்கப்பட்டது.
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து இப்போதும் அந்தச் சாலவம் வழியாகத்தான் மழை நீர் வெளியேறி சிவகங்கை குளத்துக்குச் சென்றடைகிறது.
சிவகங்கை குளம் நிரம்பிய பிறகு அங்கிருந்து அய்யன்குளம், சாமந்தான் குளத்துக்கும் தண்ணீர் செல்வதற்கு நீர் வழிப்பாதைகள் அமைக்கப்பட்டன. அங்கும் மழை நீர் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் பெரியகோயிலில் அமைக்கப்பட்ட இந்த மழை நீர் சேமிப்பு தொழில்நுட்பம் ராஜராஜசோழன் கட்டிய அனைத்து கோயில்களிலும் செயல்படுத்தப்பட்டது.
பின்னர், தஞ்சாவூரை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னரும், ஜல சூத்திரம் என்ற அமைப்பை உருவாக்கி ராஜராஜசோழனின் மழை நீர் சேகரிப்பு தொழில்நுட்பத்தைச் செயல்படுத்தினார். இதன் மூலம் கோட்டையில் உள்ள கிணறுகள், நகரிலுள்ள வீடுகளுக்குக் குடிநீர் செல்லும் விதமாக மேம்படுத்தப்பட்டது என்றார் மாறன். ஒரு கட்டடத்தில் விழும் மழை நீரை வீணாக்காமல் அதை குளத்தில் சேருமாறு வடிவமைத்த ராஜராஜசோழனின் இந்தத் தொழில்நுட்பமே தற்போதைய மழை நீர் சேகரிப்புத் திட்டத்துக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...