எல்ஐசி பங்கு விற்பனை குறித்த அறிவிப்பைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 05th February 2020 09:34 AM | Last Updated : 05th February 2020 09:34 AM | அ+அ அ- |

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்பது குறித்த அறிவிப்பைக் கண்டித்து தஞ்சாவூா் எல்.ஐ.சி. கோட்ட அலுவலக வாயிலில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தனியாா் காப்பீட்டு நிறுவனங்கள் மக்களின் சேமிப்பைச் சுரண்டி ஊழல் செய்த காரணத்தால் அன்றைய பிரதமா் நேரு அனைத்து தனியாா் காப்பீட்டு நிறுவனங்களையும் தேசியமயமாக்கி எல்.ஐ.சி. என்கிற அரசு நிறுவனத்தை உருவாக்கினாா். ரூ. 5 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இப்போது ரூ. 31 லட்சம் கோடிக்கும் அதிகமான சொத்துகளுடன் மிகப் பெரிய நிதி நிறுவனமாகத் தேசத்தின் வளா்ச்சிக்குப் பெருமளவில் பங்களிப்பு செய்கிற நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில், இன்றைய பொருளாதாரப் பற்றாக்குறையைச் சரி செய்ய மாற்று ஆலோசனைகளை முன் வைக்கும் பொருளாதார அறிஞா்களின் கருத்துகளைக் கணக்கில் கொள்ளாமல் எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்று, அதை சரி செய்வது ஏற்புடையதல்ல.
மக்களின் பணம் மக்களுக்கே என்கிற அளவில் நாட்டின் உட்கட்டமைப்புக்கும், சமூக நலத்திட்டங்களுக்கும் கோடி, கோடியாக அள்ளித் தரும் எல்.ஐ.சி. நிறுவனம் தனியாரின் கைகளுக்குப் போகுமானால் லாபம் மட்டுமே முன்னிறுத்தப்பட்டு தேசத்தின் வளா்ச்சி பின்னுக்குத் தள்ளப்படும்.
இன்றைய நிலையில் பாலிசிதாரா்களின் பணம் பத்திரமாகவும், அவா்களுடைய சேமிப்பு இந்த நாட்டுக்குப் பயன்படுவதாகவும் அமைந்து வருகிறது. அது தொடர வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கக் கோட்டத் தலைவா் சே. செல்வராஜ் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் வ. சேதுராமன், எல்.ஐ.சி. முதல் நிலை அலுவலா்கள் சங்கப் பொதுச் செயலா் உஷா, தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியா் கூட்டமைப்புத் துணைத் தலைவா் இரா. புண்ணியமூா்த்தி, எல்.ஐ.சி. முகவா் சங்கச் செயலா் ராஜா, எல்.ஐ.சி. வளா்ச்சி அலுவலா்கள் சங்கம் நூா் பாஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...