சென்ற இடமெல்லாம் வெற்றி கண்ட ராஜராஜன்

எத்தனையோ மன்னர்கள் இந்திய மண்ணில் ஆட்சி செய்துள்ளனர். ஆனால், பெரும்பாலான மன்னர்கள் எல்லா போர்களிலும் வெற்றி பெற்றதில்லை.
சென்ற இடமெல்லாம் வெற்றி கண்ட ராஜராஜன்
Updated on
3 min read



எத்தனையோ மன்னர்கள் இந்திய மண்ணில் ஆட்சி செய்துள்ளனர். ஆனால், பெரும்பாலான மன்னர்கள் எல்லா போர்களிலும் வெற்றி பெற்றதில்லை. சில போர்களில் தோல்வியும் அடைந்துள்ளனர். பல போர்களைச் சந்தித்து அனைத்திலும் வெற்றி பெற்ற மன்னர்கள் 6 பேர் மட்டுமே என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவர்களில் தமிழ் மன்னன் ராஜராஜசோழனும் ஒருவன்.

அவர் சென்ற இடமெல்லாம் வெற்றி வாகை சூடினார் என்பது மட்டுமல்ல; தோல்வியே சந்திக்காத மாமன்னன் என்ற புகழையும் உடையவர். அவரது ஆட்சிக்காலத்தில் எல்லையே கிடையாது. அந்த அளவுக்குப் பரந்து விரிந்த நிலப்பரப்புடைய தேசமாகச் சோழ நாடு இருந்தது என வரலாற்று ஆய்வாளர்கள் பெருமையாகக் குறிப்பிடுவர்.

ராஜராஜசோழன் தனது படைப் பிரிவுகளை அவ்வளவு நேர்த்தியாகப் பிரித்து, அனைவருக்கும் மிகச் சிறந்த போர் பயிற்சியையும் கொடுத்தார். 
ராஜராஜசோழன் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் 4 ஆண்டுகள் எந்தப் போரிலும் ஈடுபடவில்லை. பொதுவாகவே நாடு பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தைவிட,  நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதுதான் அவரது இலக்காக இருந்தது. ஆனால், சோழ நாட்டைச் சூழ்ந்துள்ள எதிரிகளை அடக்கி வைத்தால்தான் இந்த நாடு வளர்ச்சி அடையும் என்ற சிந்தனையும் இருந்தது. எனவே, எதிரிகள் மீது படையெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. 

தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த அவருக்குச் சேரர்கள், பாண்டியர்கள் தொல்லை கொடுத்து வந்தனர். எனவே,  ராஜராஜ சோழன், தான் ஆட்சிப் பொறுப்பேற்ற நான்காவது ஆண்டில் சேரர்கள் மீது படையெடுத்து சென்றார். அப்போது, ஒரே நேரத்தில் சேரர்களையும், பாண்டியர்களையும் போர்களில் தோற்கடித்தார். இதுதான் காந்தளூர்ச்சாலை போர் என புகழ் பாடப்படுகிறது. எனவே, அந்த வெற்றி குறித்த அவரது மெய்கீர்த்திகள் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. மேலும், சேரர்களையும், பாண்டியர்களையும் வென்றதன் மூலம் மும்முடிச்சோழன் என்ற பட்டத்தையும் பெற்றார். இந்த வெற்றியே, இதற்குப் பின்பு நிகழ்ந்த அனைத்து போர்களின் வெற்றிக்கும் அடித்தளமாக அமைந்தது.

இதன் பின்னர், இலங்கை மீது படையெடுத்தார். அப்போது (கி.பி. 991) இலங்கையை ஐந்தாம் மகிந்தன் ஆட்சி செய்து வந்தார். கேரளத்திலிருந்து சென்ற சிலர் இலங்கைப் படையில் சேர்ந்து கொண்டு மன்னர் மகிந்தனுக்கு எதிராகக் கலகத்தில் ஈடுபட்டனர். இதனால், இலங்கை மிக மோசமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது. மகிந்தா உயிர் தப்பி தென் பகுதியான ரோகனாவுக்கு சென்றார்.

இதையறிந்த மாமன்னன் ராஜராஜசோழன் கப்பல் படையுடன் இலங்கைக்குச் சென்றார். இதைத்தொடர்ந்து,  அங்கு சோழ படைகள் எளிதில் வெற்றி பெற்றன. இலங்கையின் வட பகுதியை ராஜராஜசோழன் கைப்பற்றி தரைமட்டமாக்கினார். இலங்கை  மன்னர்களுக்கு 1400 ஆண்டுகளாகத் தலைநகராக இருந்த அனுராதபுரம் தீக்கிரையாக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு சோழர்களின் படைத்தளம் அமைக்கப்பட்டது. 
இலங்கையின் வட பகுதியைக் கைப்பற்றிய ராஜராஜன் பொலனருவ நகரைத் தலைநகராக்கி, அதற்கு ஜனநாதமங்கலம் என பெயர் சூட்டினார். அங்கு தனது தாய் வானவன் மாதேவி நினைவாக வானவன் மாத்தேச்சரம் என்ற கோயிலைக் கட்டினார். பின்னர் மாதோட்ட நகரில் சிவனுக்கு ராஜராஜேச்சரம் என்ற கோயிலையும் எழுப்பினார். கற்கோயிலான அந்த ஆலயம் ராஜராஜசோழனின் வெற்றி சின்னங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

இதையடுத்து,  தமிழகத்தின் வட பகுதி மீது கவனம் செலுத்தினார். அப்போது,  வடக்கில் ராஷ்டிரகூடர்களின் ஆட்சி நடைபெற்று வந்தது. அவர்களது ஆட்சிக்குட்பட்ட பகுதிக்கும், சோழ தேசத்துக்கும் இடையிலான மைசூரை கங்கர்கள் ஆண்டு வந்தனர். இவர்கள் ராஷ்டிரகூட மன்னர்களின் சிற்றரசர்களாக இருந்தனர். அவர்களால் சோழ நாட்டுக்கு நெருக்கடி இருந்து வந்தது. எனவே, கங்க நாட்டின் மீது படையெடுத்து சென்று, அதைக் கைப்பற்றினார். 

இதேபோல, பெங்களூரு, பெல்லாரி மாவட்டம், சேலம் மாவட்டத்தின் வட பகுதி, வட ஆற்காடு மாவட்டத்தின் ஒரு பகுதி ஆகியவற்றை ஆண்டு வந்த நுளம்பர்களும் ராஷ்டிரகூட மன்னர்களின் அடியாட்களாக இருந்ததால், அவர்களையும் ராஜராஜன் வெற்றி பெற்றார். நுளம்பாடியுடன் தடிகைபாடி நாட்டையும் தனதாக்கினார்.

சோழ தேசத்தின் மேற்கில் மேலை சாளுக்கிய மன்னர் தைலபன் ஆட்சி செய்து வந்தார். இவருக்கு பிறகு இவரது மகன் சத்யாச்ரேயன் அரியணை ஏறினார். இவர் மீது,  தனது மகன் ராஜேந்திரசோழனுடன் இணைந்து ராஜராஜசோழன் பெரும் படையுடன் சென்று போர் தொடுத்தார். இதற்கான காரணம் தெளிவாகக் கிடைக்கவில்லை.
ஆனால், இப்போரின்போது அந்த நாட்டில் ராஜராஜன் பேரழிவை ஏற்படுத்தியுள்ளார். இதில், ராஜராஜன் தனி ஆளாக யானை மீது அமர்ந்து சென்று சத்யாச்ரேயனுடைய படைகளைத் தடுத்து நிறுத்தினார் என்றும், சோழர்களின் யானைப் படைகள் எதிரிகளைத் துவம்சம் செய்தன எனவும், சாளுக்கிய படைத் தளபதி கேசவன் சிறைபிடிக்கப்பட்டதாகவும் கரந்தைச் செப்பேடுகள் கூறுகின்றன.
ஹோட்டூர் என்ற இடத்தில் உள்ள சத்யாச்ரேயனுடைய கல்வெட்டில் மன்னர் ராஜராஜனும், அவனுடைய மகனும் 90,000 படைகளுடன் வந்து போரிட்டதாகவும், நாட்டை அழித்ததுடன் பெண்கள் உள்பட பலரைக் கொன்றதாகவும், மேலும் பல பெண்களைக் கைப்பற்றிக் கொண்டு சென்றதாகவும், நாட்டில் உள்ள செல்வங்கள் எல்லாம் அள்ளிக் கொண்டு செல்லப்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தப் போர் வெற்றியை ராஜராஜன் மகிழ்ந்து கொண்டாடினார் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த வெற்றியுடன் திரும்பிய ராஜராஜன், தான் கட்டிய பெரியகோயிலுக்குத் தங்க மலர்களைக் காணிக்கையாகச் செலுத்தினார் என கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர், வேங்கி நாடு மீது படையெடுத்து சென்று, அப்போரில் ஏகவீரன், படதேமன், மகாராசன் வீமன் ஆகிய பெரிய வீரர்களை ராஜராஜன் வென்றதாகவும் கூறப்படுகிறது. 
மாலத்தீவைக் கைப்பற்றியதுதான் ராஜராஜன் நடத்திய இறுதிப் போர் என வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜராஜனின் பலம் வாய்ந்த கப்பல் படைகள், முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் எனப்படும் மாலத்தீவுகளைக் கைப்பற்றியது என கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன. 

இதனால்தான் போர்க்களங்களில் தோல்வியே காணாத அதிசய மன்னர் என்ற பெருமை ராஜராஜசோழனுக்கும் இருக்கிறது. அவர் தனது படையை மிகச் சிறப்பாக வழிநடத்தியதுதான் இந்த வெற்றிக்குக் காரணம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

ஆனால், ராஜராஜசோழன் மண்ணாசைக்காகப் போரிடவில்லை. தனது நாட்டு மக்களுக்கு இருந்த ஆபத்துகளை நீக்கவே அவர் போரிட்டார். போரில் வென்று கைப்பற்றப்பட்ட பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தாலும் கூட, அந்தந்தப் பகுதியில் தனக்குச் சாதகமான நபர்களிடமே நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com