தென்னகத்தின் தட்சிண மேரு - தஞ்சை பெரிய கோயில்

தென்னகத்தின் தட்சிண மேரு - தஞ்சை பெரிய கோயில்

தன் பொழில் தஞ்சைத் தரணியில் வானளாவிய உயரத்தில் 13 தளங்களுடன் 216 அடி உயரத்தில் கி.பி. 1010-இல் பேரரசன் ராஜராஜனால் கட்டி,  குடமுழுக்கு செய்யப்பட்ட இராஜராஜீஸ்வரம்



தன் பொழில் தஞ்சைத் தரணியில் வானளாவிய உயரத்தில் 13 தளங்களுடன் 216 அடி உயரத்தில் கி.பி. 1010-இல் பேரரசன் ராஜராஜனால் கட்டி,  குடமுழுக்கு செய்யப்பட்ட இராஜராஜீஸ்வரம் என்னும் பெருங்கோயில் இன்று குடமுழுக்கை கொண்டாடுகிறது. 

இக்கோயில் கட்டுவதற்கு முன்பாக தெரிவான இடத்தைத் தேர்வு செய்த சோழர் கால கட்டடக் கலை வல்லுநர்கள் 216 அடி உயரத்தை அமைக்க 6 அடியில்  மட்டுமே  நிலத்தைச் சதுரமாகத் தோண்டி நல்ல ஆற்று மணலை நிரப்பி,  அதன் மீது அடித்தளத்தை அமைத்தனர். 

உப பீடத்தை கட்டி அதன் மீது அதிட்டானம் எனப்படும் பீடத்தை அமைத்து  கருவறையின் தரைப்பகுதியை உயர்த்தி அதன் மீது இரட்டைச் சுவர்களை இரண்டு தளங்கள் வரை அமைத்து அச்சுவர்களை நீண்ட பலகைக்கற்களால் போர்த்தி,  அதன் மீது மேற்கொண்டு 11 தளங்களை பிரமீடு அமைப்பில்  மேலே செல்ல செல்ல குறுகிச் செல்கிற கூடுகளையும் பஞ்சரங்களையும் அமைத்து மிக உயரமான விமானமாக எவ்வித  பூச்சும் இல்லாமல் கருங்கல்லை தச்சு முறையில் அடுக்கி கட்டுகின்றனர். இவ்வகை விமானம் சாந்தாரம் எனப்படும். 
கருவறையின் உட்பகுதியிலிருந்து உச்சி வரை வெற்றிடமாக இவ்விமானம் காட்சியளிக்கும். இதில் மற்றொரு சிறப்பு,   விமானத்தின் சுவர்களை அமைத்து கருவறையை உருவாக்கி கோயிலை முழுமையாக்கிய பின்பே கோயில்களில் மூலவர் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். ஆனால் , ராஜராஜன் கருவறையின் அடித்தரையை உருவாக்கிய பின்பு  மிகப்பெரிய லிங்க வடிவ தெய்வத்தைக் கருவறையில் பிரதிஷ்டை செய்த பின்பே சுவர்களை எழுப்புகிறார்.

அவ்வாறு சுவர்கள் எழுப்பப்படும்போது மிகவும் எடையுள்ள கருங்கற் சுவர்களை அமைக்கும்போது ஒரு கல் கீழே விழுந்தாலும்  மூல லிங்கம் பழுதடைந்து விடும். சோழர் கால பெருந்தச்சன் ராஜராஜ பெருந்தச்சனும் குஞ்சர மல்ல பெருந்தச்சனும் அவர்களுடன் பணியாற்றிய பிற கற்தச்சர்களும் மிகவும் நேர்த்தியாக விமானத்தை அமைத்துள்ளனர். இது இன்றைய பொறியியல் வல்லுநர்களையே வியப்படைய செய்வதாக அமைந்துள்ளது. 
இத்தகு பெரிய விமானத்தை அமைத்த மன்னருக்கு இணையாக ராஜராஜனின்  மதிநுட்பமுடைய ராணுவத் தளபதி  கிருஷ்ணராமன் தனது பங்காக சுற்றுவளாகத்தை இரு தள அமைப்புடன் அமைத்து பல தெய்வங்கள் உறையும் சிற்றாலயங்களை ஆங்காங்கே அமைத்துள்ளார். இப்போது இத்திருச்சுற்று மாளிகையும் தரைத்தளத்தை மட்டுமே கொண்டுள்ளது. பல கலைஞர்களின், பொதுமக்களின் பங்கும் இக்கோயில் திருப்பணியில் அமைந்துள்ளதை இங்குள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. 

ராஜராஜனின் முதல் கல்வெட்டிலேயே அம்மன்னன் மக்களுக்கு மதிப்பளித்து அவர்களைக் குறிப்பிடுகின்றார்.  இக்கோயிலின் முன்பாக ராஜராஜன் திருவாசல், கேராளந்தகன் திருவாசல்  என இரண்டு கோபுரங்களையும் ராஜராஜன் காலத்திலேயே அமைத்துள்ளனர். 

கோயில் கட்டி முடிக்கப்பட்ட பின் பல பொற்குடங்களையும்  பொன்னால் ஆன அணிகலன்களையும்,  நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட அணிகலன்களையும் செப்புத் திருமேனிகளையும் மன்னன் மட்டுமன்றி,  அவரது அன்பிற்குரிய அக்காள் குந்தவையும் மன்னரின் மனைவிகளும் மற்றும் மக்களும் அளித்த கொடைகளைக் கல்வெட்டாக வெட்டி மக்களைப் பெருமைப்படுத்தி உள்ளார் மாமன்னர் ராஜராஜன். இக்கோயிலின் கருவறையைச் சுற்றி இரண்டு அடுக்குகளிலும் சோழர் கால ஓவியர்களைக் கொண்டு பல வண்ணங்களில் புராணக் கதைகளையும்  சிவனுடைய பெருமைகளையும் தில்லைக் கோயிலையும் காட்சியாக அமைத்துள்ளார். 

தமிழகத்தின் பொருளாதார நிலை சோழர் காலத்தில் உயர்ந்த நிலையில் இருந்ததற்கு எடுத்துக்காட்டாக 216 அடியுள்ள இக்கோயிலின் விமானம் முழுவதுமாக நான்கு பக்கங்களிலும் பொன் தகடுகளைக்கொண்டு ராஜராஜன் போர்த்தியுள்ளார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே உலகின் மிக உயர்ந்த பொற்கோயிலாக தஞ்சாவூர் பெரிய கோயில் விளங்கியுள்ளது. இப்பொன் தகடுகளின் அடிச்சுவடு இன்று இல்லாமல் போனாலும், அதனைக் குறிக்கும் கல்வெட்டு ஒன்று இரண்டாவது கோபுரத்தின் இடப்பக்கச் சுவரில் வெட்டப்பட்டிருப்பது, பார்வையாளர்களின் பார்வைக்கு கூட  தென்படாமல்  இன்றும் உள்ளது. 

இக்கோயிலில் சமூகத்தின் அனைத்து குடிமக்களும் பணியாற்றி உள்ளனர். அவர்களின் ஒவ்வொரு பெயரும் இக்கோயிலில் கல்வெட்டுகளாக வெட்டப்பட்டுள்ளன. தளிச்சேரிப் பெண்கள் அரசின் பணியாளர்களாக கோயிலில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். தமிழகத்தின் பல கோயில்களில் இருந்து இவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஊதியமும் அரசு வீடுகளும் அளிக்கப்பட்டுள்ளமை இன்றைய  அரசின் திட்டங்களுக்கு ராஜராஜன் முன்னோடியாக விளங்கியுள்ளார் என்பதையே எடுத்துக் காட்டுகிறது.

சு. ராசவேலு,
மதிப்புறு பேராசிரியர், வரலாற்றுத் துறை,
அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com