பாண்டிய மன்னன் கட்டிய அம்மன் கோயில்
By DIN | Published On : 05th February 2020 05:47 AM | Last Updated : 05th February 2020 05:47 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் பெரியகோயிலில் ராஜராஜ சோழன் காலத்தில் பெருவுடையார் சன்னதியும், சண்டீசர் சன்னதியும் மட்டுமே இருந்தன என்பர் வரலாற்று ஆய்வாளர்கள். குறிப்பாக, அம்மனுக்கு என தனிக்கோயில் (சன்னதி) இருந்ததில்லை. இதே நிலையே அவருக்குப் பிந்தைய சோழர்களின் ஆட்சிக் காலத்திலும் நிலவியது. சோழர் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, தஞ்சையைப் பாண்டியர்கள் கைப்பற்றினர்.
அவர்களது ஆட்சியில், நந்தி மண்டபத்துக்கு வடபுறமுள்ள அம்மன் சன்னதி பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. இதுபற்றிய குறிப்புகள் இச்சன்னதியின் மேற்குப்புறச் சுவரிலுள்ள கல்வெட்டில் காணப்படுகின்றன. இக்கல்வெட்டின் எழுத்தமைதி கி.பி. 14 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. இதன் அடிப்படையில் இக்கல்வெட்டு பாண்டிய மன்னர் ஒருவரது கல்வெட்டு என வரலாற்று ஆய்வாளர்கள் உறுதி செய்கின்றனர். இவரே தற்போதுள்ள அம்மன் சன்னதியை எழுப்பினார் என்பதை அறிய முடிகிறது.
தஞ்சை பெரியகோயிலை ஸ்ரீ இராஜராஜேச்சரம் என இக்கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. அம்மனின் திருநாமத்தை "உலகு முழுதும் உடைய நாச்சியார்' எனக் கூறுகிறது. இந்தக் கோயிலின் பூசைகளுக்காக அருமொழித்தேவ வளநாட்டில் மேற்கூற்றாகத் திகழும் விடையபுரத்துக் கொட்டகர்க்குடி என்ற ஊரில் 11 வேலி நிலம் அளித்ததையும் விவரிக்கிறது.
தஞ்சைப் பெரியகோயிலுக்குப் பாண்டிய மன்னர் ஒருவர் அளித்த கொடையே இந்த அம்மன் கோயில். இதன் கருவறை விமானத்தின் சிகரம் இங்குள்ள சண்டீசர் விமானத்தின் கலைப்பாணியிலேயே அமைக்கப்பட்டுள்ளது.
கருவறையில் 7 அடிக்கும் அதிகமான உயரமுள்ள நின்ற கோல அம்மன் திருவுருவம் மிகுந்த எழிலுடன் படைக்கப்பட்டுள்ளது. உலகு முழுதும் உடைய நாச்சியார் என்ற திருநாமத்துடன் பாண்டிய மன்னர் ஒருவரால் அமைக்கப்பட்ட இத்திருமேனி பிற்காலத்தில் தமிழில் பெரியநாயகி என்றும், வடமொழியில் ப்ருஹந்நாயகி எனவும் அழைக்கப்பட்டது.
கருவறையின் மூன்று புறங்களிலும் தேவகோஷ்டங்கள் உள்ளன. மேற்கு நோக்கிய தேவகோஷ்டத்தில் தேவியின் நின்ற கோலத் திருவுருவம் உள்ளது. மேலிரு கரங்களில் மான் மழு ஏந்தி, கீழிருகரங்களில் அபயம், வரதம் காட்டி நிற்கிறாள் அன்னை பராசக்தி. இது மிக அபூர்வமான கோலமாகும். சிவபெருமானும், அதிகார நந்தியும் மட்டுமே ஏந்தும் மான் முழுவைத் தேவி தாங்கி நிற்பது அரிய காட்சி. வடக்கு, கிழக்கு கோஷ்டங்களில் இறைவி அக்கமாலையும், தாமரையும் ஏந்திக் கொண்டு அபயம் காட்டி தொடைமேல் இறுத்திய ஒரு கரத்துடன் காட்சி அளிக்கிறாள்.
கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம் ஆகிய அமைப்புடன் காணப்படும் இச்சன்னதியின் முக மண்டபம் கட்டுமான அமைப்பால் சற்றுப் பிற்காலக் (நாயக்கர் கால) கலைப்பாணியாய்த் திகழ்கிறது. நீண்டு வளைந்த கொடுங்கைகளுடன் இம்மண்டபம் திகழ்கிறது. தூண்களில் எழில்மிகு சிற்பப் படைப்புகள் உள்ளன.
இக்கோயிலில் திருச்சுற்றின் வட பகுதியில் முன்புறம் காணப்படும் கல்வெட்டில் திருச்சுற்று மாளிகையில் ஆலயத்து பரமேஸ்வரி என்ற எழுத்து காணப்படுகிறது. இதன் மூலம் அங்கு அம்மனுக்கு என தனி கோயில் இருந்தது தெரிய வருகிறது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...