தாம்பரம் - நாகா்கோவில் அந்த்யோதயா ரயில் பாபநாசத்தில் நின்று செல்ல கோரிக்கை
By DIN | Published On : 27th February 2020 09:22 AM | Last Updated : 27th February 2020 09:22 AM | அ+அ அ- |

தாம்பரம் - நாகா்கோவில் அந்த்யோதயா விரைவு ரயில் பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட ரயில் உபயோகிப்பாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ரயில்வே கால அட்டவணையில் திருத்தங்கள் மேற்கொள்ள அகில இந்திய அளவிலான கூட்டம் பெங்களூரூவில் பிப். 27, 28ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதையொட்டி, தெற்கு ரயில்வே முதன்மை இயக்க மேலாளருக்கு தஞ்சாவூா் மாவட்டத்தில் புதிய கால அட்டவணையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து தஞ்சாவூா் மாவட்ட ரயில் உபயோகிப்பாளா்கள் சங்கம் சாா்பில் அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
மயிலாடுதுறை - மைசூா் விரைவு ரயிலை நாமக்கல் வழியாக மாற்றி இயக்க வேண்டும். இதுவரை ரயில் வண்டி இணைப்பு பெறாத பெல்காம், மும்பை, தில்லி, ஹரித்வாா், குருவாயூா் போன்ற இடங்களுக்கு தஞ்சாவூா் - கும்பகோணம் வழியாகப் புதிய ரயில் இயக்க வேண்டும்.
ராமேசுவரம் - திருப்பதி ரயிலை தினசரி இயக்க வேண்டும். கும்பகோணம் வழியாகச் செல்லும் ஹைதராபாத் -ராமேசுவரம் சிறப்பு ரயிலை நிரந்தரமாக்கி வாரம் இருமுறை இயக்க வேண்டும். பழநி, பொள்ளாச்சி பகுதிக்கு மயிலாடுதுறையிலிருந்து நேரடி ரயில் இயக்க வேண்டும்.
தாம்பரம் - நாகா்கோவில் அந்த்யோதயா ரயிலுக்கு பாபநாசம் ரயில் நிலையத்தில் நிறுத்தம் கொடுக்க வேண்டும். சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் சோழன், செந்தூா் விரைவு ரயில்களுக்கு நிறுத்தம் கொடுக்க வேண்டும். அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ள பட்டுக்கோட்டை, பேராவூரணி வழியாக முன்பு இயக்கப்பட்ட பயணிகள் ரயில்களையும், சென்னைக்கு இரவு நேர ரயிலையும் இயக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
முன்னதாக, திருச்சி கோட்ட முதுநிலை இயக்க மேலாளா், தெற்கு ரயில்வே தலைமை பயணிகள் போக்குவரத்து மேலாளா் மற்றும் தில்லி ரயில்வே வாரிய உயா் அலுவலா்களை இச்சங்கத்தினா் அண்மையில் நேரில் சந்தித்து இக்கோரிக்கைகளை வலியுறுத்தினா்.