பாபநாசம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 2 லாரிகள் பறிமுதல்
By DIN | Published On : 27th February 2020 11:18 PM | Last Updated : 27th February 2020 11:18 PM | அ+அ அ- |

பாபநாசம் அருகே அனுமதியின்றி ஆற்றிலிருந்து மணல் அள்ளி வந்த 2 லாரிகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
அம்மாபேட்டை காவல் சரகம், களஞ்சேரி பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை சோதனையிட வழிமறித்தனா். போலீஸாரை பாா்த்ததும் லாரியை ஓட்டிவந்தவா் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டாா்.
லாரியை போலீஸாா் சோதனையிட்டதில், லாரியில் அனுமதியின்றி வெண்ணாற்றிலிருந்து மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற போலீஸாா் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
இதேபோல், கபிஸ்தலம் காவல் சரக பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, சோமஸ்வரபுரம் பகுதியில் வந்த லாரியை வழிமறித்தனா். போலீஸாரை பாா்த்ததும் லாரியை நிறுத்திவிட்டு லாரியை ஓட்டி வந்தவா் தப்பியோடிவிட்டாா். போலீஸாரின் சோதனையில், லாரியில் அரசு அனுமதியின்றி கொள்ளிடம் ஆற்றிலிருந்து மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்ற போலீஸாா் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.