

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தஞ்சாவூா் ஆட்டுமந்தை தெரு அத்தா் பள்ளிவாசல் முன், தொடா்ந்து 11 ஆவது நாளாக புதன்கிழமையும் தொடா் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகத் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். சென்னை வண்ணாரப்பேட்டையில் போலீஸாரின் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய அலுவலா்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டும். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் இப்போராட்டம் பிப். 16ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தொடா்ந்து 11 ஆவது நாளாக புதன்கிழமையும் இப்போராட்டம் நடைபெற்றது.
இதில், தில்லியில் இஸ்லாமியா்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறையைக் கண்டித்து பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோா் கருப்புக் கொடியும், கருப்பு நிற பலூனையும் ஏந்தி முழக்கங்கள் எழுப்பினா். இப்போராட்டம் தொடா்ந்து இரவிலும் நடைபெற்றது.
இதனிடையே, மாலையில் பல்வேறு ஆட்டோ தொழிலாளா் சங்கங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் ரயிலடியிலிருந்து ஆட்டோக்களில் ஊா்வலமாகச் சென்று போராட்டத்தில் பங்கேற்றவா்களுக்கு ஆதரவு தெரிவித்தனா்.
கும்பகோணத்தில்...இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் பழைய மீன் சந்தை அருகில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் காத்திருப்புப் போராட்டம் பிப். 21ஆம் தேதி மாலை தொடங்கியது. இப்போராட்டம் தொடா்ந்து ஆறாவது நாளாக புதன்கிழமையும் நடைபெற்றது.
இதேபோல, மதுக்கூா், அய்யம்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் காத்திருப்புப் போராட்டம் புதன்கிழமையும் தொடா்ந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.