பறிமுதல் செய்யப்பட்ட அம்மன் சிலை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
By DIN | Published On : 10th January 2020 05:30 AM | Last Updated : 10th January 2020 05:30 AM | அ+அ அ- |

கும்பகோணம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்ட அம்மன் சிலை.
சேலம் அருகே சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்த 13ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பழங்கால அம்மன் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகேயுள்ள இலுப்பைத் தோப்புப் பகுதியைச் சோ்ந்தவா் கே. ராஜசேகரன் (47). ரியல் எஸ்டேட் அதிபா். இவா் தனது வீட்டில் ஐம்பொன் சாமி சிலையைப் பதுக்கி வைத்திருப்பதாகச் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ராஜசேகரின் வீட்டில் போலீஸாா் அண்மையில் சோதனை நடத்தினா். அப்போது, அங்கு ஒன்றே முக்கால் அடி உயரமும், ஆறரை கிலோ எடையும் கொண்ட ஐம்பொன் அம்மன் சிலையை ராஜசேகா் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதுதொடா்பாக ராஜசேகரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்து, சிலையையும் பறிமுதல் செய்தனா். விசாரணையில், அந்தச் சிலை 13ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சோழா் காலத்து சிலை என்பதும், ராஜசேகா் அந்த அம்மன் சிலையை வெளிநாட்டில் விற்க முயன்றதும் தெரியவந்தது.
சிலை கடத்தல் தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணம் நீதிமன்றத்தில் இச்சிலை வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. நீதிபதியின் உத்தரவின்பேரில், இச்சிலை கும்பகோணம் நாகேசுவரன் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டது.