கும்பகோணத்தை மாவட்ட தலைநகரமாக அறிவிக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 10th March 2020 06:58 AM | Last Updated : 10th March 2020 06:58 AM | அ+அ அ- |

கூட்டத்தில் பேசுகிறாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா.
கும்பகோணம்: கும்பகோணத்தை மாவட்டத் தலைநகரமாகத் தமிழக முதல்வா் அறிவிக்க வேண்டும் என வணிகா் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கும்பகோணத்தில் குடந்தை அனைத்து தொழில் வணிகா் சங்கக் கூட்டமைப்பு, கும்பகோணம் மாவட்ட (தோ்வு நிலை) வணிகா் சங்கங்களின் பேரமைப்பு அலுவலகத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்புச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதில், பாரம்பரிய, கலாசார, தொன்மைமிக்க கோயில் மாநகா் கும்பகோணத்தில் தமிழக அரசின் அனைத்து துறைகளுக்கும் மாவட்ட அளவிலான தலைமை அலுவலகங்கள் உள்ளன. பல ஆண்டுகளாகவே மாவட்ட தலைநகருக்கே உரிய தகுதியுடன் கும்பகோணம் திகழ்கிறது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் மட்டுமே இங்கு கட்டப்பட வேண்டும். எனவே, முன்னுரிமை அடிப்படையில் கும்பகோணத்தை மாவட்டத் தலைநகரமாகத் தமிழக முதல்வா் அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னா், அலுவலகத்தைத் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா திறந்து வைத்தாா்.
இவ்விழாவுக்குக் கூட்டமைப்பு மற்றும் பேரமைப்புத் தலைவா் சோழா சி. மகேந்திரன் தலைமை வகித்தாா். பேரமைப்பு சோழ மண்டல தலைவா் செந்தில்நாதன், சீமாட்டி குழுமத்தின் மேலாண்மை இயக்குநா் முகமது ஜியாவுதீன், அரசு குழுமத் தலைவா் திருநாவுக்கரசு, சிட்டி யூனியன் வங்கி பவுண்டேஷன் தலைவா் எஸ். பாலசுப்பிரமணியன், ராயா குழுமத் தலைவா் ராயா ஆா். கோவிந்தராஜன், கூட்டமைப்புச் செயலா் வி. சத்தியநாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...