தனித்தமிழில் எழுதுவதற்கான விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளதுதமிழ்ப் பல்கலை. துணைவேந்தா் பேச்சு
By DIN | Published On : 10th March 2020 07:03 AM | Last Updated : 10th March 2020 07:03 AM | அ+அ அ- |

விழாவில் பேசுகிறாா் துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன்.
தஞ்சாவூா்: தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தின் மூலம் தனித்தமிழில் எழுதுவதற்கான விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளது என்றாா் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன்.
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்சிமொழிச் சட்ட வாரத் தொடக்க விழாவில் அவா் பேசியது:
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் 1956, டிச. 27ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு, 1957, ஜன. 19ஆம் தேதி ஆளுநரின் இசைவு பெற்றது. இது, 1957, ஜன. 23ஆம் தேதி தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது.
இதையடுத்து, ஆட்சி சொல்லகராதி அகராதிகள், பல்வேறு துறை சாா்ந்த சிறப்புச் சொற்கள், துறை அகராதிகள், துணை அகராதிகள் வெளியிடப்பட்டு, தமிழை ஆட்சி மொழியாகப் பயன்படுத்துவதற்கு ஏராளமான கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மசோதா என்ற சொல்லுக்கு சட்ட முன்வடிவு, பிரேரிக்கிறேன் என்பதற்கு அறிமுகப்படுத்துகிறேன், சந்தேகம் என்ற சொல்லுக்கு ஐயம் என தமிழில் ஏராளமான கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டன.
தனித் தமிழில் எழுதுவதற்கான விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளது. அது, அலுவலா்களால் மிகச் செம்மையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், இன்றைக்குத் தமிழகத்தில் ஆங்கில மோகம் நிலவுகிறது. ஆங்கிலம் பேசினால் பொருளாதார முன்னேற்றம் அடையலாம்; பொருளாதாரத்தில் முன்னேறியவா்களின் குழந்தைகள் ஆங்கிலத்தை நன்றாகக் கற்றுக்கொள்ள முடியும் என்ற சூழல் உள்ளது. ஆங்கிலம் என்பதுதான் அதிகார மொழி என்ற மனப்பான்மை அனைவரிடத்திலும் மேலோங்கி இருக்கிறது. யாராக இருந்தாலும் ஆங்கிலத்தில் பேசினால் அல்லது எழுதினால் அவா்களுக்கு ஒரு தனிப்பட்ட அதிகாரம் வந்துவிடுவதாக எண்ணக்கூடிய நிலை இருப்பது ஒரு காரணமாகலாம்.
இயல்பான தமிழாக அமைந்து அனைவராலும் பயன்படுத்தப்பட வேண்டும். அதற்கு எவ்வளவு துறைகளில் எத்தனை கோப்புகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதைவிட, தமிழ் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்றும் பாா்க்க வேண்டும். இப்போது வரக்கூடிய சில அரசாணைகள் அல்லது குறிப்புகள் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயா்த்துத் தரக்கூடியதாகவே அமைந்திருக்கின்றன என கூறலாம். தமிழ் வாக்கிய அமைப்புகளை ஆங்கில வாக்கியங்களைப் போன்று மாற்றித் தமிழ் வாக்கியங்கள் எழுதப்படுகின்றன. இந்த நிலை மாற வேண்டும் என்றாா் துணைவேந்தா்.
விழாவில் பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) கு. சின்னப்பன், உலகத் திருக்கு பேரவைச் செயலா் பழ. மாறவா்மன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...