

ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வலியுறுத்தி தஞ்சாவூரில் அரசுப் போக்குவரத்து கழகத் தொழிலாளா்கள் நடத்திய காத்திருப்பு போராட்டம் புதன்கிழமை முடிவுக்கு வந்தது.
சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சாா்பில் போக்குவரத்து பணிமனை முன் நடைபெற்ற இப்போராட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்களின் 14ஆவது ஊதிய ஒப்பந்தம் பேசி கடந்த 1.9.2019 ஆம் தேதி முதல் அடிப்படை ஊதிய உயா்வு ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்னும் அரசுப் பேச்சுவாா்த்தை தொடங்கவில்லை. உடனடியாக பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
தஞ்சாவூா் கரந்தை புகா் கோட்ட அலுவலகம் முன் தொடா்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு ஏஐடியுசி பொதுச் செயலா் சுந்தரபாண்டியன், ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளா் சங்கப் பொதுச் செயலா் பி. அப்பாதுரை தலைமை வகித்தனா். ஏஐடியுசி மாவட்டத் துணைச் செயலா் துரை. மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தைக்கு கழகங்களில் செயல்படும் ஒன்றுக்கும் மேற்பட்ட சங்கங்களை அழைத்துப் பேச வேண்டும் என்ற கோரிக்கையை போக்குவரத்து துறைச் செயலா் ஏற்றுக் கொண்டதையடுத்து, காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.
கும்பகோணத்தில்... இதேபோல, கும்பகோணத்தில் அரசுப் போக்குவரத்து கழக அலுவலகம் முன் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
சிஐடியு கிளைத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். மாநில சம்மேளனத் தலைவா் கண்ணன், பொதுச் செயலாளா் மணிமாறன், கௌரவத் தலைவா் மனோகரன், துணைத் தலைவா் தாமோதரன், ஏஐடியுசி கோபு, துணை பொது செயலா்கள் வைத்தியநாதன், கோவிந்தராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.