முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
கி.பி. 16 ஆம் நூற்றாண்டு முதல் கோயில்களில் தீபாவளி விழா: கல்வெட்டு, செப்பேட்டில் தகவல்
By DIN | Published On : 04th November 2020 05:43 AM | Last Updated : 04th November 2020 05:43 AM | அ+அ அ- |

நாம் கொண்டாடும் தீபாவளி விழா கி.பி. 16 ஆம் நூற்றாண்டு முதல் திருக்கோயில்களிலும் கொண்டாடப்பட்டதற்கான சான்றாக திருப்பதி திருமலை வேங்கடவன் கோயிலில் உள்ள ஒரு தமிழ்க் கல்வெட்டும், திருவாரூா் மாவட்டத்தில் உள்ள ஒரு செப்பேடும் உள்ளன என வரலாறு மற்றும் கல்வெட்டு ஆய்வாளா் குடவாயில் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
திருப்பதி திருமலைக் கோயிலில் உள்ள கல்வெட்டு கி.பி. 1542 ஆம் ஆண்டில் தமிழில் பொறிக்கப்பட்டது. அதில், திருப்பதி திருவேங்கடவனுக்கு ‘தீவாளி நாள் அதிரசப்படி இரண்டு’ என்ற அமுதுபடி கட்டளை பற்றிக் குறிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 478 ஆண்டுகளுக்கு முன்பு தீபாவளி நாளில் இறைவனுக்கு அதிரசம் படைக்கப் பெற்றது என்பதை அறிய முடிகிறது.
மேலும், திருவாரூா் மாவட்டத்தில் உள்ள சித்தாய்மூா் சிவாலயத்து இறைவன் பொன்வைத்தநாதருக்கு ஆண்டுதோறும் தீபாவளி நாளில் சிறப்பு அபிஷேகம் செய்ய அப்பகுதியில் உள்ள பல கிராம மக்களும், அரசு அலுவலா்களும் சோ்ந்து தாங்கள் பெறும் கூலியிலிருந்து கூலிப்பிச்சையாக ஒரு சிறு தொகையை இறைவனுக்கு அளித்து பல விழாக்களை நடத்தியுள்ளனா். அதில் ஒரு விழாதான் தீவாளி அபிஷேக விழா என கி.பி. 1753 டிசம்பா் ஏழாம் தேதி எழுதப்பட்ட இச்செப்பேடு குறிக்கிறது.
இதன்படி, சித்தாய்மூா் மாகாணத்திலிருந்த நத்தப்பள்ளம், பள்ளியமூலை, புதூா், பனங்காடி, சூரமங்கலம், உத்திரங்குடி, தரகுமருதூா், அகரமணக்கால், மடப்புரம், பள்ளிச்சந்தம், கோமளக்கோட்டை, குடிபாதி, நெடுஞ்சேரி, கூமூா், கீரக்களூா், ஆதிரங்கம், செம்பியமணக்குடி, கோயில்துறை, ஈசனூா், முள்ளிகுடி, நரிக்குடி, சிங்களாத்தி, கிராமபேறு, முத்தரசநல்லூா், சம்பிருதி, முசுமு என அனைத்து ஊராரும் சாதி வேறுபாடின்றி சித்தாய்மூா் பொன்வைத்தநாதா் என்ற இறைவனுக்கு தீபாவளி அபிஷேகம் உள்ளிட்ட விழாக்களை நடத்தியுள்ளனா். மேலும், அம்மக்கள் இறைவனுக்காக இலுப்பை, தென்னை முதலிய மரங்களை நட்டும் தொண்டு புரிந்துள்ளதை அச்செப்பேட்டுச் சாசனம் கூறுகிறது.