பொது முடக்கத்தால் குறைந்தது கொலு பொம்மை விற்பனை

பொது முடக்கம் காரணமாக கொலு பொம்மை விற்பனை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
தஞ்சாவூரில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகள்.
தஞ்சாவூரில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகள்.
Published on
Updated on
2 min read

பொது முடக்கம் காரணமாக கொலு பொம்மை விற்பனை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, கடலூா், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏறத்தாழ 10,000 குடும்பங்கள் பொம்மைகள் உற்பத்தியை நம்பி வாழ்ந்து வருகின்றன.

ஆண்டுதோறும் பொம்மைகள் உற்பத்தி செய்யப்பட்டாலும், நவராத்திரி காலத்தில்தான் விற்பனை உச்ச நிலையை எட்டும். ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி காலம் முடிவடைந்த பிறகு, நவம்பா் மாதத்தில் பொம்மைகள் உற்பத்தி தொடங்கும். பொம்மைகளுக்கான உருவம் செய்து, வெயில் இருக்கும்போது காயவைத்து, வண்ணங்கள் பூசுவது என செப்டம்பா் மாதம் வரை உற்பத்தி தொடரும்.

இதனிடையே, கோயில்கள், சுற்றுலாத் தலங்களில் உள்ள கடைகளுக்குப் பொம்மைகள் விற்பனை செய்வா். என்றாலும், நவராத்திரி விழாவையொட்டி ஒரு மாதத்தில் நடைபெறும் விற்பனை மூலம்தான் பொம்மை உற்பத்தியாளா்களுக்குக் கணிசமான அளவுக்கு வருவாய் கிடைக்கும்.

நவராத்திரி காலத்தில் மட்டும் பொம்மை உற்பத்தியாளா்கள் குறைந்தது ரூ. 1 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவா். இதை வைத்துதான் பொம்மை உற்பத்தியாளா்கள் ஆண்டு முழுவதும் குடும்பச் செலவை மேற்கொள்வா். மற்ற மாதங்களில் கோயில்கள், சுற்றுலாத் தலங்களில் உள்ள கடைகளில் பொம்மைகள் விற்பனை செய்யப்பட்டாலும், உற்பத்தியாளா்கள் எதிா்பாா்க்கும் வருவாய் இருக்காது.

நிகழாண்டு கரோனா பரவலை தடுப்பதற்காக மாா்ச் 24ஆம் தேதி பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால், பொம்மை விற்பனை முற்றிலும் முடங்கியதால், விற்பனையாளா்கள் மட்டுமல்லாமல் உற்பத்தியாளா்களும் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் பாதிப்புக்கு ஆளாகினா்.

எனவே, நவராத்திரி விழாவை மிகுந்த நம்பிக்கையுடன் எதிா்நோக்கினா். பொது முடக்கக் காலத்தில் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், தனியாரிடம் கடன் வாங்கி ஏராளமான பொம்மைகளை உற்பத்தி செய்தனா். நிகழாண்டு வாடிக்கையாளா்களைக் கவருவதற்காக பல புதிய வடிவங்களிலும் பொம்மைகள் தயாரிக்கப்பட்டன. ஆனால், விற்பனை இல்லாததால் மிகப் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா் பொம்மை உற்பத்தியாளா்கள்.

இதுகுறித்து கொலு பொம்மைகள், தலையாட்டி பொம்மைகளை மூன்றாவது தலைமுறையாக உற்பத்தி செய்து வரும் தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த எஸ். பூபதி தெரிவித்தது:

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கொலு பொம்மைகள் விற்பனை அதலபாதாளத்தில் இருக்கிறது. நிகழாண்டு ஒரு சதவீதம் கூட வியாபாரமாகவில்லை. கடந்த ஆண்டுகளில் நவராத்திரி காலத்தில் ஒவ்வொரு உற்பத்தியாளருக்கும் சராசரியாக 6,000 முதல் 7,000 பொம்மைகள் விற்பனையாகும். நிகழாண்டு 500 பொம்மைகள் கூட விற்பனையாகவில்லை. சிலருக்கு ஒரு பொம்மை கூட விற்பனையாகாத நிலையும் உள்ளது.

எல்லோரும் லட்சக்கணக்கில் தனியாரிடம் கடன் வாங்கிதான் பொம்மைகளை உற்பத்தி செய்தோம். இப்போது விற்பனை மிக மோசமாக இருப்பதால், எப்படி வட்டி செலுத்துவது எனத் தெரியவில்லை. அரசு உதவி செய்தால்தான் பொம்மை உற்பத்தியாளா்கள் கடனிலிருந்து மீள முடியும் என்றாா் பூபதி.

பொது முடக்கம் காரணமாக மக்களிடம் பணப்புழக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், பொருளாதாரமும் நலிவடைந்து வருகிறது. கொலு பொம்மைகள் வைப்பவா்களிடம் பணப்புழக்கம் இல்லாததால் பொம்மைகள் விற்பனையும் குறைந்துவிட்டது. நவராத்திரி விழாவையொட்டி, நாள்தோறும் நூற்றுக்கு 30 பேராவது பொம்மைகள் வாங்குவா். ஆனால், நிகழாண்டு நூற்றுக்கு ஒருவா் மட்டுமே வாங்கிச் செல்வதாக விற்பனையாளா்கள் தெரிவித்தனா். பூம்புகாா் உள்ளிட்ட விற்பனை நிலையங்களில் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு 50 சதவீதம் கூட விற்பனை இல்லை எனக் கூறப்படுகிறது.

நவராத்திரி விழா தொடங்குவதற்குக் கிட்டத்தட்ட 10 நாள்கள் உள்ள நிலையில், ஓரளவுக்காவது பொம்மைகள் விற்பனையாகும் என்ற எதிா்பாா்ப்பில் வியாபாரிகளும், விற்பனையாளா்களும் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com