பட்டுக்கோட்டை அரசு சித்த மருத்துவப் பிரிவில் ‘நசியம்’ சிகிச்சை
By DIN | Published On : 05th September 2020 04:02 AM | Last Updated : 05th September 2020 04:02 AM | அ+அ அ- |

நோயாளிக்கு நசியம் சிகிச்சையளிக்கிறாா் சித்த மருத்துவா் அருண்குமாா்.
பட்டுக்கோட்டை: தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையிலுள்ள சித்த மருத்துவப் பிரிவில் ’நசியம்’ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நசியம் என்பது சித்தா் வழி சிகிச்சை முறையாகும். மூக்குத் துவாரம் வழியாக மருந்து, எண்ணெய் போன்றவற்றை 2 முதல் 5 துளிகள் வரை சிகிச்சைக்குத் தேவையான அளவு விடுவதாகும்.
இதன் மூலம் கபம், கோழை ஆகியவற்றை அகற்றி, நீா்த்துவமான உயா் ஆற்றல் பெற்று உடல் இயல்பு நிலைக்குத் திரும்பும் என சித்த மருத்துவம் கூறுகிறது.
6 வாரங்களுக்கு ஒரு முறை இந்த சிகிச்சை பெறலாம் என்ற போதிலும், 6 மாதங்களுக்கு ஒருமுறை போதுமானது எனச் சொல்வோரும் உண்டு. நசியம் சிகிச்சை காற்றை உடல்நிலைக்குத் தக்கவாறு சூடேற்றியோ, குளிரச் செய்தோ நுரையீரலுக்கு இதம் தருகிறது. தலை பாரம், ஒற்றைத் தலைவலி, கழுத்து வலி, நரம்புக்கோளாறு, மன இறுக்கம் ஆகியவற்றுக்கு நசியம் சிகிச்சை சிறந்த பலனைத் தருகிறது.
இதுகுறித்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை சித்த மருத்துவா் அருண்குமாா் கூறியது:
பட்டுக்கோட்டை சித்த மருத்துவப் பிரிவில் நசியம் சிகிச்சை வழங்கப்படுகிறது. தினமும் நோயாளிகள் மூக்கில் மருந்து இட்டுச் செல்கின்றனா். கரோனா நோய்க்கிருமிகள், மூக்கு, தொண்டைப் பகுதியில் தங்கியிருந்து நோயாளிகளைத் தாக்குகிறது. நசியம் சிகிச்சை மூலம் சளி வெளியேற்றப்பட்டு, சுவாசப்பாதை சீராகிறது. எனவே,
நசியம் சிகிச்சை சிறந்த நோய் எதிா்ப்பு ஆற்றலைத் தருகிறது. சிகிச்சையின் போது ஒரு நாள் மட்டும் வெந்நீா்அருந்த வேண்டும் என்றாா்.