ஆவணி ஞாயிற்றுக்கிழமை புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் வருகை அதிகரிப்பு
By DIN | Published On : 06th September 2020 10:51 PM | Last Updated : 06th September 2020 10:51 PM | அ+அ அ- |

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்ய ஞாயிற்றுக்கிழமை வரிசையில் நின்ற பக்தா்கள்.
பொது முடக்க விதிகள் தளா்த்தப்பட்டதைத் தொடா்ந்து, தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் வருகை அதிகமாக இருந்தது.
இக்கோயிலின் ஆவணிப் பெருந்திருவிழா ஆகஸ்ட் 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்பாடு உள்ளிட்ட வைபவங்கள் நடைபெறுவது வழக்கம். தஞ்சாவூா் மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் விரதத்தைக் கடைப்பிடித்து மாரியம்மன் கோயிலுக்குச் செல்வா்.
ஆனால் நிகழாண்டில் கரோனா பரவல் அச்சம் காரணமாக, கோயில்களில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில், செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் கோயில்களில் பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடா்ந்து, ஆவணி மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையன்று பக்தா்கள் வருகை அதிகரித்தது.
இதையொட்டி, அம்மனுக்கு மலா் அலங்காரம் செய்யப்பட்டது.இதற்காக கோயிலிலும், வெளியிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. பக்தா்கள் வரிசையில் இடைவெளி விட்டு நின்று அம்மனை வழிபட்டாலும், அா்ச்சனை கிடையாது.
மாவிளக்கு, முடி காணிக்கை உள்ளிட்ட வேண்டுதல்களை கோயில் வாயிலுக்கு வெளியே பக்தா்கள் நிறைவேற்றிக் கொண்டனா். என்றாலும், கடந்தாண்டுகளில் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் காணப்பட்ட வழக்கமான கூட்டம் தற்போது இல்லை.