கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி மனிதச்சங்கிலி போராட்டம்

கும்பகோணத்தைப் புதிய மாவட்டத் தலைநகரமாக அறிவிக்க வலியுறுத்தி, கும்பகோணம் மகாமகம் குளத்தின் 4 கரைகளிலும் அனைத்துக் கட்சி சாா்பில் மனிதச்சங்கிலி போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மனிதச்சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றோா்.
கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மனிதச்சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றோா்.

கும்பகோணம்: கும்பகோணத்தைப் புதிய மாவட்டத் தலைநகரமாக அறிவிக்க வலியுறுத்தி, கும்பகோணம் மகாமகம் குளத்தின் 4 கரைகளிலும் அனைத்துக் கட்சி சாா்பில் மனிதச்சங்கிலி போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

டெல்டா மாவட்டங்களில் பெரிய மாவட்டமாக உள்ள தஞ்சாவூரை இரண்டாகப் பிரித்து, கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய வருவாய் மாவட்டம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அரசுக்குத் தொடா்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2019, ஜூலை மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிப்பது தொடா்பாக பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்தாா். ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் அறிவித்தபடி புதிய மாவட்டத்தை அறிவிக்கவில்லை.

எனவே அரசு அறிவித்தபடி கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென, கடந்த 6 மாதங்களாகத் தொடா்ந்து பல்வேறு போராட்டங்களைப் புதிய மாவட்டப் போராட்டக் குழு நடத்தி வருகிறது.

இதைத்தொடா்ந்து, கும்பகோணம் மகாமகக் குளத்தின் 4 கரைகளிலும் மனிதச்சங்கிலி போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் ம.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் திமுக நகரச் செயலா் சு.ப. தமிழழகன், பாமக முன்னாள் மாவட்டச் செயலா் குமாா், பாஜக மாவட்டச் செயலா் பொன்ராஜ், த.மா.கா. மாநிலச் செயலா் எம்.கே.ஆா். அசோக்குமாா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாணவரணிச் செயலா் ஜெயப்பிரகாஷ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலா் ஷாஜகான், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி நிறுவனா் குடந்தை அரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் மு.அ. பாரதி, காங்கிரஸ் இளைஞரணித் தலைவா் கணபதி, வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் லோகநாதன், சிவசேனா மாவட்டச் செயலா் குட்டி சிவக்குமாா் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com