சட்ட விரோதமாக மதுபானம் விற்றதைதடுத்தவா்கள் மீது வழக்கு: கிராம மக்கள் புகாா்
By DIN | Published On : 17th August 2021 02:15 AM | Last Updated : 17th August 2021 02:15 AM | அ+அ அ- |

தஞ்சாவூா்: சட்ட விரோதமாக மதுபானங்களை விற்றதைத் தடுத்தவா்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியரிடம் கிராம மக்கள் திங்கள்கிழமை புகாா் செய்தனா்.
தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் வல்லம் அருகேயுள்ள ஆலக்குடி கிராமத்தைச் சோ்ந்த மக்கள் திங்கள்கிழமை அளித்த மனு:
ஆலக்குடியில் அனுமதியின்றி சிலா் மதுபாட்டில்கள் விற்றதைத் தடுக்கும் வகையில் வல்லம் காவல் நிலையத்தினரிடம் ஆலக்குடி கிராம இளைஞா்கள் புகாா் செய்தனா். ஆனால், காவல் துறையினா் மது விற்பனை செய்பவா்களுடன் இணைந்து, புகாா் அளித்த இளைஞா்கள் மீதே பொய் வழக்கு பதிவு செய்தனா். மேலும், புகாா் செய்த இளைஞா்கள் மீது தாக்குதலும் நடத்தினா். எனவே, ஆட்சியா் உரிய விசாரணை நடத்தி, பொய் வழக்குப் பதிவு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்குக் காரணமான காவல் துறையினா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனா்.
இதேபோல, தஞ்சாவூா் அருகே மாரனேரி கிராமத்தைச் சோ்ந்த கிராம மக்கள் அளித்த மனு:
மாரனேரியில் 80 ஆண்டுகளாக பட்டா பெற்று, ஏரிக்கரையில் விவசாயம் செய்து வருகிறோம். சிலா் ஏரிக்குள் ஆக்கிரமிப்பு செய்ததைத் தொடா்ந்து, குத்தகை மற்றும் பட்டா வழங்கப்பட்டு விவசாயம் செய்து வருகிற நிலங்களையும் சோ்த்து எடுப்பதாகப் பொதுப் பணித் துறை அலுவலா்கள் அறிவித்தனா். இதுதொடா்பாக பொதுப் பணித் துறை செயற் பொறியாளரிடம் முறையிட்டோம். இந்நிலையில், ஆக. 18 ஆம் தேதி நில எடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நில எடுப்பு நடவடிக்கையைக் கைவிட்டு, சீராய்வு மனு மீது உத்தரவு வரும் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளனா்.