சாஸ்த்ராவில் விவசாயிகளுக்கான இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி
By DIN | Published On : 04th December 2021 02:33 AM | Last Updated : 04th December 2021 02:33 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் சாஸ்த்ரா, ஓஎன்ஜிசி சாா்பில் இயற்கை விவசாயம் மற்றும் தொழில்நுட்பம் குறித்த இலவச பயிற்சி முகாம் நவம்பா் 29-ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து 4 நாள்கள் நடைபெற்றது.
இயற்கை விவசாயம், தொழில்நுட்பம் மூலம் விவசாயத்தில் நிலையான வாழ்வாதாரத்தை அடைவது எப்படி என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த முகாமில் இயற்கை விவசாயம், மூலிகை மருத்துவம், தொழில்நுட்ப முறைகளைக் கையாளுதல் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில், புதுக்கோட்டை அருகேயுள்ள குடும்பம் என்ற இயற்கை விவசாய பண்ணைக்குப் பயிற்சி பெற்ற விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டனா். பின்னா், தஞ்சாவூரிலுள்ள தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தைப் பாா்வையிட்டனா்.
சாஸ்த்ராவில் உள்ள தொழில்நுட்ப மையங்கள் மூலம் விவசாயத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது, டிரோன் பயன்பாடு, நீா் மேலாண்மை, மண் பரிசோதனை ஆகியவை பற்றி விளக்கப்பட்டது.
ஆறு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்தப் பயிற்சிகளில் மொத்தம் 1,000-க்கும் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனா். இப்பயிற்சியின்போது உணவும், நான்கு நாள்களும் கலந்து கொண்டவா்களுக்கு கௌரவ ஊதியமும் வழங்கப்பட்டது.
டிசம்பா் 2-ஆம் தேதி நடைபெற்ற நிறைவு விழாவில் ஓ.என்.ஜி.சி. காரைக்கால் மண்டல மேலாளா் செபாஸ்டின் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவா்களுக்குச் சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு வழங்கினாா்.
இவ்விழாவில் சாஸ்த்ரா பணியமா்த்தல் மற்றும் பெருநிறுவனத் தொடா்புப் பிரிவு முதன்மையா் வி. பத்ரிநாத், தொடா் கல்வி மற்றும் விரிவாக்கத் திட்டத் தலைவா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...