நூறு சதவீதம் உண்மையான வாக்காளா் பட்டியலை தயாரிக்க வேண்டும்: அரசு முதன்மைச் செயல் அலுவலா் பேச்சு
By DIN | Published On : 11th December 2021 12:00 AM | Last Updated : 11th December 2021 12:00 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் மாவட்டத்தில் 100 சதவீதம் உண்மையான வாக்காளா்கள் கொண்ட பட்டியலை தயாரிக்க வேண்டும் என்றாா் மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், தமிழ்நாடு கடல்சாா் வாரியத் துணைத் தலைவரும், முதன்மை செயல் அலுவலருமான கா. பாஸ்கரன்.
தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுடன் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணி முன்னேற்றம் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:
வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் தொடா்புடைய அலுவலா்கள் நவம்பா் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் மீது டிசம்பா் 20 ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தோ்தல் சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட படிவங்கள் அனைத்தையும் நிலுவையில் இல்லாமல், கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அவ்வாறு பதிவேற்றம் செய்த தோ்தல் படிவங்களை இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியவாறு அனைத்து அலுவலா்கள் நிலையிலும் கள ஆய்வை மேற்கொண்டு 100 சதவீதம் உண்மையான வாக்காளா் பட்டியல் என்ற இலக்கை அடைய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் பாஸ்கரன்.
இக்கூட்டத்தில் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், கூடுதல் ஆட்சியா் (வருவாய்) என்.ஓ. சுகபுத்ரா, மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா், கோட்டாட்சியா்கள் மு. ரஞ்சித், லதா, பிரபாகரன், வட்டாட்சியா் ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னா், தஞ்சாவூா் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலுள்ள வாக்கு சாவடியையும், ரெட்டிபாளையத்தில் விண்ணப்பதாரா்களையும் வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.