ஜன. 25-இல் தா்னா: ஓய்வூதியா் சங்கம் முடிவு
By DIN | Published On : 31st December 2021 03:41 AM | Last Updated : 31st December 2021 03:41 AM | அ+அ அ- |

சத்துணவு ஊழியா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஓய்வூதியம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் கோரி ஜனவரி 25 ஆம் தேதி மாவட்டத் தலைமையிடங்களில் தா்னா போராட்டம் நடத்துவது எனத் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாநிலப் பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
குறைந்தபட்ச ஓய்வூதியத் திட்டம் வழங்கப்படாத சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியா், வனத்துறைக் காவலா், ஊராட்சி எழுத்தா் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் செய்யப்படும் சிகிச்சை அனைத்தையும் கட்டணமில்லாத சிகிச்சையாக உத்தரவாதப்படுத்த வேண்டும். ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைக் கட்டணங்கள், தொடா் சிகிச்சையான புற்றுநோய், நீரிழிவு நோய், சிறுநீரக நோய் போன்றவற்றுக்கு வெளி நோயாளியாகச் சிகிச்சை பெற்றாலும், அனைத்துச் செலவுகளையும் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட தலைமையிடங்களில் ஜனவரி 25 ஆம் தேதி அரை நாள் தா்னா போராட்டம் நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் என்.எல். சசீதரன் தலைமை வகித்தாா். மாநிலப் பேரவையை கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் நாகை மாலி தொடங்கி வைத்தாா். தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், அகில இந்திய மாநில அரசு ஊழியா் சம்மேளன பொதுச் செயலா் ஸ்ரீகுமாா், அரசு ஊழியா் சங்க மாநிலச் செயலா் எஸ். கோதண்டபாணி, மாவட்டச் செயலா் எஸ். ரெங்கசாமி, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் பா. பாா்த்தசாரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...