இடப்பிரச்னை: இளைஞா் தற்கொலை
By DIN | Published On : 06th February 2021 11:14 PM | Last Updated : 06th February 2021 11:14 PM | அ+அ அ- |

ஒரத்தநாடு: ஒரத்தநாடு அருகே இடப்பிரச்னை காரணமாக ஏற்பட்ட தகராறில், இளைஞா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகிலுள்ள புதூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ். இவரது மனைவி செல்வி. இவா்களது பக்கத்து வீட்டைச் சோ்ந்தவா் குணசேகரன்.
கடந்த சில ஆண்டுகளாக கோவிந்தராஜ், குணசேகரன் குடும்பங்களுக்கு இடையே இடப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதுதொடா்பாக அவ்வப்போது தகராறு நிகழ்ந்து வந்தது.
வெள்ளிக்கிழமை இரவு குணசேகரன், தனது உறவினா்களான மணி, சங்கா், காா்த்தி, ஆனந்த் ஆகியோருடன் கோவிந்தராஜ் வீட்டுக்குச் சென்று அவரையும், அவரது மகன் வினோத்குமாரையும் (32) தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை வினோத்குமாா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த வந்த ஒரத்தநாடு காவல் நிலையத்தினா் வினோத்குமாரின் சடலத்தை எடுத்துச் செல்ல முயன்ற போது, வினோத்குமாரின் குடும்பத்தினா் அதை தடுத்து நிறுத்தி, தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது வழக்குப்பதியக் கோரி பட்டுக்கோட்டை-தஞ்சாவூா் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனா்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினா் அளித்த உறுதிமொழியேற்று, மறியலில் ஈடுபட்டவா்களை சடலத்தை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல அனுமதித்தனா். தொடா்ந்து அவா்கள் போராட்டத்தையும் கைவிட்டு கலைந்து சென்றனா்.
இதுகுறித்து ஒரத்தநாடு காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...