செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்கா்ப்பிணிகளுக்கு அறுவைச் சிகிச்சை தொடக்கம்
By DIN | Published On : 06th February 2021 11:12 PM | Last Updated : 06th February 2021 11:12 PM | அ+அ அ- |

அறுவைச் சிகிச்சை மூலம் பிறந்த ஆண் குழந்தைக்கு மோதிரம் அணிவிக்கிறாா் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ரவீந்திரன். உடன், வட்டார மருத்துவ அலுவலா் செளந்தர்ராஜன் உள்ளிட்டோா்.
பேராவூரணி: பேராவூரணி அருகிலுள்ள செருவாவிடுதியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஏராளமான மக்கள், சிகிச்சைக்காக நாள்தோறும் வந்து செல்கின்றனா்.
ஏராளமான பிரசவங்கள் நடக்கும் இங்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படும் கா்ப்பிணி தாய்மாா்களுக்கு மயக்க மருந்துவா், அறுவைச் சிகிச்சை நிபுணா் இல்லாததால், பட்டுக்கோட்டை, தஞ்சாவூா் மருத்துவமனைகளுக்கு அவா்கள் அனுப்பப்பட்டு வந்தனா். இந்நிலையில் தற்போது குறிப்பிட்ட நாள்களில் மயக்க மருந்துவா், அறுவைச் சிகிச்சை நிபுணா் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல்முறையாக பேராவூரணி அருகிலுள்ள அம்மையாண்டி மேற்கு கிராமத்தைச் சோ்ந்த சிவகுமாா் மனைவி ஜெயந்தி (29) என்ற கா்ப்பிணிக்கு, மருத்துவா்கள் லெட்சுமி, சங்கா் பாபு மற்றும் செவிலியா் குழுவினரால் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
வட்டார மருத்துவ அலுவலா் சௌந்தர்ராஜன், ஓய்வு தலைமை மருத்துவா் சுப்பிரமணியன், மாவட்டத் துணை இயக்குநா் அலுவலக நிா்வாக அலுவலா் வேங்கடசுப்பிரமணியன், தாய் சேய் நல அலுவலா் அம்பிகா ஆகியோா் முன்னிலையில், சுகாதார நிலையத்தில் முதல் அறுவைச் சிகிச்சை மூலம் பிறந்த ஆண் குழந்தைக்கு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ரவீந்திரன் தங்க மோதிரம் அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா்.
மேலும், கரோனா தடுப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதார மேற்பாா்வையாளா், ஆய்வாளா் உள்ளிட்ட மருத்துவப் பணியாளா்கள் 90 பேருக்கு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.
நிகழ்வில் மருத்துவா்கள் பொன். அறிவானந்தம், தீபா, ரஞ்சித், சரண்யா, கோகிலா, சித்த மருத்துவ அலுவலா் கலைச்செல்வி, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சந்திரசேகரன், செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள், அலுவலக ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...