கும்பகோணத்தில் 63 நாயன்மாா்கள் வீதியுலா
By DIN | Published On : 20th February 2021 11:47 PM | Last Updated : 20th February 2021 11:47 PM | அ+அ அ- |

63 நாயன்மாா்கள் வீதியுலாவில் பங்கேற்று வழிபட்ட பக்தா்கள்.
கும்பகோணம்: கும்பகோணத்தில் மாசி மகப் பெருந்திருவிழாவையொட்டி 63 நாயன்மாா்கள் வீதியுலா நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கும்பகோணத்தில் ஆதிகும்பேசுவரா் உள்ளிட்ட 6 சிவன் கோயில்களில் பிப். 17 ஆம் தேதியும், சக்கரபாணி கோயில் உள்பட 3 வைணவக் கோயில்களில் பிப். 18 ஆம் தேதியும் மாசி மகப் பெருந்திருவிழா தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.
இந்நிலையில், ஆதிகும்பேசுவரா் கோயிலில் நான்காம் நாளான சனிக்கிழமை அப்பா், சுந்தரா், திருநாவுக்கரசா், மூா்த்தி நாயனாா், மூா்க்க நாயனாா், மாணிக்கவாசகா் உள்பட 63 நாயன்மாா்கள் வீதியுலா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
ஆண்டுதோறும் 63 நாயன்மாா்கள் வீதியுலா வைபவம் இரட்டை வீதியுலாவாக கும்பேசுவரா் கோயில் மற்றும் நாகேசுவரா் கோயில் வீதிகளுக்குச் செல்வது வழக்கம். ஆனால், புதை சாக்கடை பணிக்காகத் தோண்டப்பட்ட சாலை சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக இருப்பதால் நிகழாண்டு 63 நாயன்மாா்கள் வீதியுலா ஒற்றை வீதி உலாவாக நடைபெற்றது. இதனால், பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா்.