பேருந்து சேவை பாதிப்பால் பயணிகள் கடும் அவதி: போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 27th February 2021 07:11 AM | Last Updated : 27th February 2021 07:11 AM | அ+அ அ- |

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தால் பேந்து சேவை பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.
அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களுக்குப் புதிய ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனே பேசி முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. இதில், பெரும்பாலான தொழிலாளா்கள் பங்கேற்றுள்ளனா். இதையொட்டி, தஞ்சாவூரில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக தஞ்சாவூா் ஜெபமாலைபுரத்திலுள்ள நகரக் கிளை 1 மற்றும் 2-இல் வெள்ளிக்கிழமை 110 பேருந்துகளுக்கு 31 பேருந்துகள் மட்டுமே வெளியே சென்றன. இதேபோல, கரந்தையிலுள்ள புகா் கிளையில் 49 பேருந்துகளில் 29 பேருந்துகளும், அரசு விரைவு போக்குவரத்துக் கிளையில் 30 பேருந்துகளுக்கு 2 பேருந்துகளும் மட்டுமே இயக்கப்பட்டன.
அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் மண்டலத்திலுள்ள தஞ்சாவூா், கும்பகோணம், ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருவையாறு என 12 இடங்களிலுள்ள கிளைகளில் 461 பேருந்துகள் உள்ளன. இவற்றில் வெள்ளிக்கிழமை 131 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. அதாவது 28 சதவீத பேருந்துகள் இயங்கின.
இதனால் கரந்தை தற்காலிக பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்துகள் மட்டுமே நின்றன. இவற்றிலும் இடம் கிடைக்காமால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினா். குறைந்த அளவிலேயே பேருந்துகள் இருந்ததால், பயணிகள் வெகு நேரம் காத்திருந்தனா்.
காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு, தனியாா் நிறுவன ஊழியா்கள், கூலித் தொழிலாளா்கள் உள்ளிட்டோா் பேருந்துகள் கிடைக்காமல் அவதிப்பட்டனா். இதனால், தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால், கரோனா காரணமாக ரயில்கள் குறைவாகவே இயக்கப்படுவதால் பயணிகள் வெகு நேரம் காத்திருந்தனா்.