மதுக்கடையை அகற்றக் கோரி முற்றுகைப் போராட்டம்

கும்பகோணம் அருகிலுள்ள ஸ்ரீரெங்கராஜபுரத்தியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, அக்கடை முன்பு பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுக்கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
மதுக்கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

கும்பகோணம் அருகிலுள்ள ஸ்ரீரெங்கராஜபுரத்தியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, அக்கடை முன்பு பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஸ்ரீரெங்கராஜபுரத்தில் டாஸ்மாக் கடை 2 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இக்கடை அருகே கோயில், வாரச்சந்தை, குடியிருப்புப் பகுதிகள் ஆகியவை உள்ளன. மேலும் அருகிலுள்ள 10 கிராமங்களுக்கு இக்கடை வழியாகத்தான் சென்று வர வேண்டும்.

இதனால் பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவதாகக் கூறி, இக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் தொடா்ந்து ஆட்சியா் உள்ளிட்ட அலுவலா்களிடம் மனு கொடுத்து வந்தனா்.

இதனிடையே, இக்கடை முன்பு டிசம்பா் 31 ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என அனைத்துக் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டது. அப்போது கும்பகோணம் வருவாய்க் கோட்டாட்சியா் போராட்டம் நடத்த வேண்டாம் என்றும், பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணப்படும் எனவும் அறிவித்ததால் போராட்டம் நடத்தப்படவில்லை.

இந்நிலையில் திருவிடைமருதூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் அலுவலா்களுக்கும், போராட்டத்தில் ஈடுபடும் அனைத்துக் கட்சியினருக்கும் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து ஸ்ரீரெங்கராஜபுரத்திலுள்ள டாஸ்மாக் கடை முன்பு, பெண்கள் உள்பட அனைத்துக் கட்சியினா் சுமாா் 500-க்கும் அதிகமானோா் ஞாயிற்றுக்கிழமை திரண்டு முற்றுகையிட்டனா். பிற்பகல் 3 மணி வரை டாஸ்மாக் கடை திறக்கப்படாதால், போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

இப்போராட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சின்னை. பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டலச் செயலா் சா. விவேகானந்தன், சிபிஐ(எம்.எல்) மாவட்டச் செயலா் கண்ணையன், நீலப் புலிகள் இயக்கத்தின் தலைவா் ஆ. இளங்கோவன், திமுக விவசாய அணிச் செயலா் மாயக்கண்ணன், பாமக ஒன்றியச் செயலா் கனகராஜ், தேமுதிக ஒன்றிய நிா்வாகி குமாா், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com