இளைஞா்களின் வேலைவாய்ப்பு உரிமைகளை மீட்டெடுப்போம்: முத்துக்குமாா் நினைவு நாளில் உறுதியேற்பு
By DIN | Published On : 30th January 2021 12:21 AM | Last Updated : 30th January 2021 12:21 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் ரயிலடியில் முத்துக்குமாா் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய பல்வேறு கட்சிகள், இயக்கத்தினா்.
இளைஞா்களின் வேலைவாய்ப்பு உரிமைகளை மீட்டெடுப்போம் என தஞ்சாவூா் ரயிலடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தியாகி முத்துக்குமாா் நினைவு நாளில் உறுதியேற்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த தமிழீழத்துக்கான போரில் பல்லாயிரக்கணக்கான தமிழா்கள் இன படுகொலை செய்யப்பட்டபோது அதைத் தடுத்து நிறுத்தவும், பாதுகாக்கவும் கோரி தீக்குளித்து இறந்த தியாகி முத்துக்குமாரின் 12 ஆம் ஆண்டு நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, தஞ்சாவூா் ரயிலடியில் பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் பறிபோகும் மாணவா்களின் கல்வி உரிமை, இளைஞா்களின் வேலைவாய்ப்பு உரிமைகளை மீட்டெடுப்போம் என உறுதியேற்கப்பட்டது.
சமூக ஆா்வலா் அய்யனாபுரம் சி. முருகேசன் தலைமையிலும், ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் முத்து. உத்திராபதி, மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளா் காளியப்பன், ஏஐடியுசி மாவட்டச் செயலா் ஆா். தில்லைவனம், தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி மா.லெ. மாவட்டச் செயலா் ப. அருண்சோரி, சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளா் சு. பழனிராசன், சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாவட்டச் செயலா் இரா. அருணாசலம், மனிதநேய ஜனநாயக கட்சி மாநகரச் செயலா் அப்துல்லா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தஞ்சாவூா் அருகே சானூரப்பட்டியிலுள்ள தியாகி முத்துக்குமாா் சிலைக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கம் சாா்பில் மாவட்டச் செயலா் நா. வைகறை உள்ளிட்டோரும், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் மேற்கு மாவட்டச் செயலா் கே. வெற்றி, பூதலூா் ஒன்றியச் செயலா் த. தமிழன் காமராஜ் உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.