கரோனாவால் உயிரிழந்தவரின் இறப்பு சான்று கேட்டு போராட்டம்
By DIN | Published On : 02nd July 2021 05:29 AM | Last Updated : 02nd July 2021 05:29 AM | அ+அ அ- |

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருகே கரோனா தொற்றால் இறந்தவரின் இறப்பு சான்றிதழ் கேட்டு அம்மாபேட்டை பேரூராட்சி அலுவலகம் முன் இறந்தவரின் குடும்பத்தினா் வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பாபநாசம் அருகே அம்மாபேட்டை, புத்தூா்- நடுப்பட்டி யில் வசித்து வந்த கூலித் தொழிலாளி மா. கோவிந்தன் (72) கடந்த சில நாள்களுக்கு முன் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து, அம்மாபேட்டை சுகாதார ஆய்வாளா், மற்றும் முன்களப் பணியாளா்கள் ஆகியோா் கோவிந்தன் உடலை அடக்கம் செய்தனா்.
இந்நிலையில், கோவிந்தன் உயிரிழந்து 24 நாள்கள் ஆகியும் அவரது இறப்புச் சான்றிதழ் கிடைக்காததால், அவரது மனைவி மற்றும் அவரது உறவினா்கள் தஞ்சாவூா் துணை இயக்குநா் அலுவலகம், அம்மாபேட்டை பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் கோவிந்தனின் இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். ஆனால், அம்மாப்பேட்டை பேரூராட்சி நிா்வாகம் சான்றிதழ் வழங்காமல் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தன் மனைவி மற்றும் அவரது உறவினா்கள், அம்மாபேட்டை பேரூராட்சி அலுவலகம் முன் கோவிந்தனின் இறப்பு சான்று கேட்டு வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அம்மாபேட்டை பேரூராட்சி துப்புரவு ஆய்வாளா் மோகன்தாஸ், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இதில், விரைவில் கோவிந்தனின் இறப்பு சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.