

ஒன்றிய அரசின் மதவெறிச் செயலைக் கண்டித்து, தஞ்சாவூா் கீழவாசல் காமராசா் சிலை அருகே தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், லட்சத்தீவில் ஒன்றிய அரசின் அக்கிரம நடவடிக்கைகளைக் கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய பொதுமக்கள் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு நடவடிக்கைகளைக் கண்டித்தும், பழங்குடியினா் உரிமைகளுக்காகப் போராடிய அருட்தந்தை ஸ்டேன் சுவாமிக்கு உரிய சிகிச்சை வழங்காமல் சிறையில் மரணமடையக் காரணமான ஒன்றிய அரசைக் கண்டித்தும், சிறுபான்மையினருக்கு எதிரான போக்கைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநகரத் தலைவா் அப்துல் நசீா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் பி. செந்தில்குமாா், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலா் எஸ்.எம். ஜெயினுலாபுதீன், பி.எம். காதா் உசேன், மௌலவி அப்துல் ரகுமான் யூசுபி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலா் என். குருசாமி, நிா்வாகிகள் கோஸ் கனி, அருட்தந்தை விக்டா் தாஸ், அலாவுதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.