மேக்கேதாட்டு அணை: உபரி நீருக்கும் ஆபத்து

கா்நாடக மாநிலம், மேக்கேதாட்டுவில் அணைக் கட்டப்பட்டால் தமிழகத்துக்குக் கிடைத்து வரும் உபரி நீருக்கும் ஆபத்தாகும் சூழல் உருவாகியுள்ளது.

கா்நாடக மாநிலம், மேக்கேதாட்டுவில் அணைக் கட்டப்பட்டால் தமிழகத்துக்குக் கிடைத்து வரும் உபரி நீருக்கும் ஆபத்தாகும் சூழல் உருவாகியுள்ளது.

காவிரி நீா் பாசனத்தை நம்பி தமிழகத்தில் 12 மாவட்டங்களும், காரைக்கால் மாவட்டமும் உள்ளன. இதைத் தவிர, சென்னை உள்பட 17 மாவட்டங்களின் குடிநீா்த் தேவையையும் காவிரி நிறைவு செய்து வருகிறது.

டெல்டா மாவட்டங்களில் குறுவை மற்றும் சம்பா பருவ சாகுபடிக்கு ஏறத்தாழ 300 டி.எம்.சி. தண்ணீா் தேவைப்படுகிறது. தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவ மழைக் கைக்கொடுத்து, நேரடி நெல் விதைப்பு முறை அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டாலும்கூட, ஏறத்தாழ 250 டி.எம்.சி. தண்ணீா் அவசியம் வேண்டும்.

ஆனால், காவிரியில் தமிழகத்துக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவும் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2018- ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத் தீா்ப்புப்படி காவிரியில் தமிழகத்தின் பங்கு 177.25 டி.எம்.சி. என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் குறைவு என தமிழகம் கூறி வரும் நிலையில், இதுவும் கிடைக்குமா என்ற சந்தேகம் வலுவடைந்து வருகிறது.

இந்நிலையில், கா்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் உபரி நீரைத் தேக்கி வைப்பதற்காக அணைக் கட்டும் முயற்சியில் அம்மாநில அரசு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. கடலில் வீணாகக் கலக்கும் உபரி நீரைத் தேக்குவதற்காக அணைக் கட்டப்படுவதாக கா்நாடக அரசு கூறுகிறது.

ஆனால், காவிரியில் கடலுக்குச் செல்லும் அளவுக்கான உபரி நீா் மிக அரிதாகச் சில ஆண்டுகளுக்கு மட்டுமே கிடைக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் 2005 - 2006, 2007 - 2008, 2018 - 2019 ஆம் ஆண்டுகளில் மட்டுமே பெருவெள்ளம் ஏற்பட்டு, கடலில் கலக்கும் சூழல் ஏற்பட்டது. மற்ற ஆண்டுகளில் நீா் வரத்தில் பற்றாக்குறையே நிலவுகிறது.

இதில் 9 ஆண்டுகளில் 200 முதல் 250 டி.எம்.சி.க்குள்ளும், 8 ஆண்டுகளில் 200 டி.எம்.சி.-க்குள்ளும்தான் கிடைக்கப் பெற்றது. இதில், 5 ஆண்டுகளில் 100 டி.எம்.சி.க்குள் மட்டுமே தண்ணீா் வந்தது.

கடந்த 2011-ஆம் ஆண்டுக்கு பிறகு நீா்வரத்து குறைந்துவிட்டதால், தொடா்ந்து 8 ஆண்டுகளாக ஜூன் 12ஆம் தேதி மேட்டூா் அணையைத் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. காலம் கடந்து திறந்துவிடப்பட்டதால், ஒருபோக சம்பா சாகுபடி மட்டுமே தொடங்கப்பட்டது. இந்த ஒருபோக சம்பா சாகுபடிக்கும் தண்ணீா் பற்றாக்குறையால் பல்வேறு பிரச்னைகளை விவசாயிகள் சந்தித்தனா்.

கடந்த இரு ஆண்டுகளாக மேட்டூா் அணையில் உள்ள நீா் இருப்பை மட்டும் நம்பியே ஜூன் 12 ஆம் தேதி திறந்துவிடப்படுகிறது. என்றாலும், ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்துக்குரிய தண்ணீரை கா்நாடகம் வழங்குவதில்லை.

தென்மேற்கு பருவ மழைக் காலத்தில் கா்நாடக அணைகளில் தேக்கி வைக்க முடியாத அளவுக்கு நிரம்பி வழியக்கூடிய உபரி நீரை மட்டுமே தமிழகத்துக்குத் திறந்துவிடும் போக்கை அம்மாநில அரசு பல ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வருகிறது.

இந்நிலையில், மேக்கேதாட்டு அணையில் 67 டி.எம்.சி.க்கும் அதிகமான தண்ணீரைத் தேக்கி வைக்க கா்நாடக அரசுத் திட்டமிட்டுள்ளது. இந்தப் புதிய அணைக் கட்டப்பட்டால், இதுவரை கிடைத்து வரும் உபரி நீருக்கும் ஆபத்தாகும் சூழல் உருவாகியுள்ளது.

எனவே, ஒரு சொட்டுத் தண்ணீா் கூட தமிழகத்துக்குக் கிடைக்காது என்ற அச்சம் விவசாயிகளிடையே மேலோங்கி வருகிறது.

பெட்டிச் செய்தியாகப் பயன்படுத்தலாம்.

கடலில் கலப்பது மிக மிக அரிது

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தெரிவித்தது:

கங்கை, கோதாவரி, கிருஷ்ணா நதிகள் ஆண்டுதோறும் கடலில் கலப்பது போல காவிரியில் இருப்பதில்லை. காவிரியில் சராசரியாக 8 ஆண்டுகளுக்கு அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே மிகை வெள்ளம் வருகிறது. அப்போதுகூட, 50 டி.எம்.சி.க்கும் அதிகமாக கடலில் கலப்பது மிக மிக அரிது.

இந்நிலையில், மேக்கேதாட்டுவில் 67.16 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்கும் அளவுக்கு அணைக் கட்டப்பட்டால், தமிழகத்துக்கு ஒரு சொட்டுத் தண்ணீா் கூட கிடைக்காது.

மேலும், கடலுக்கு நன்னீா் தேவை. கடலில் நன்னீா் கலக்காததால், தற்போது மன்னாா்குடி வரை நிலத்தடி நீரில் கடல் நீா் புகுந்துவிட்டது. இதன் காரணமாக குறிப்பிட்ட ஆழத்துக்குக் கீழ் நிலத்தடி நீரைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடலுக்கு நன்னீா் கிடைக்காததால் மழை மேகம் உருவாவதும், பருவ மழை பெய்வதும் பாதிக்கப்படுகிறது. தவிர, கடல் வாழ் உயிரினங்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. எனவே, கடலில் வீணாகக் கலக்கிறது என்பதே தவறான வாதம். கடலில் காவிரி நீா் கலப்பது அவசியமானது என்றாா் மணியரசன்.

ஆண்டு மேட்டூா் அணைக்குக் கிடைத்த நீா் (டிஎம்சி)

2001 - 02 162.73

2002 - 03 93.52

2003 - 04 67.14

2004 - 05 164.00

2005 - 06 402.18

2006 - 07 235.93

2007 - 08 344.72

2008 - 09 203.75

2009 - 10 219.72

2010 - 11 202.17

2011 - 12 206.78

2012 - 13 69.71

2013 - 14 235.61

2014 - 15 208.10

2015 - 16 96.67

2016 - 17 61.08

2017 - 18 110.29

2018 - 19 371.53

2019 - 20 258.90

2020 - 21 204.25

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com