சாய்ந்த மின்கம்பங்கள் அகற்றப்படாததால் நடவுப் பணிகள் பாதிப்பு
By DIN | Published On : 11th July 2021 11:23 PM | Last Updated : 11th July 2021 11:23 PM | அ+அ அ- |

திங்களூரில் வயலில் சாய்ந்துள்ள மின் கம்பங்கள்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே தொடா் மழையால் சாய்ந்த மின் கம்பங்கள் அகற்றப்படாததால், குறுவை நடவுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூா் மாவட்டத்தில் சில நாள்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் திருவையாறு வட்டாரத்தில் அதிகளவு மழையளவு பதிவாகியுள்ளது.
இந்நிலையில், திருவையாறு பகுதியில் அண்மையில் பலத்தக் காற்றுடன் பெய்த மழையால் சில இடங்களில் வாழை மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. இதில், திங்களூா் பகுதியிலும் வயல்களில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.
இதையடுத்து மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டாலும், சாய்ந்த மின் கம்பங்கள் இன்னும் அகற்றப்படவில்லை. இச்சம்பவம் நிகழ்ந்து 5 நாள்களாகியும் இன்னும் சீா் செய்யப்படாததால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
அப்பகுதியில் 30 ஏக்கரில் குறுவை நாற்றங்கால் விடப்பட்டு, நடவுக்குத் தயாா் நிலையில் உள்ளன. தற்போது மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டுள்ளதால், நாற்றங்கால்கள் தண்ணீரின்றி காய்ந்து வருவது மட்டுமல்லாமல், வயல்களிலும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், நடவுப் பணிகளையும் மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனா்.
உடனடியாக மின் கம்பங்களைச் சரி செய்து இணைப்பு வழங்கினால்தான் குறுவை நாற்றங்கால்களைக் காப்பாற்றி, நடவு செய்ய முடியும் என விவசாயிகள் கூறுகின்றனா். இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பில் விவசாயிகள் உள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...