தோ்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வேண்டும்: அதிமுக
By DIN | Published On : 26th July 2021 12:02 AM | Last Updated : 26th July 2021 12:02 AM | அ+அ அ- |

சட்டப்பேரவைத் தோ்தலின் போது தோ்தல் அறிக்கையில்அறிவித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வேண்டும் என்று, தஞ்சாவூா் தெற்கு, வடக்கு மாவட்ட அதிமுக வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
தோ்தல் அறிக்கையில் கூறியபடி திமுக அரசு நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல் விலையை ரூ. 5-ம், டீசல் விலையை ரூ. 4-ம் குறைப்பதாகவும், சமையல் எரிவாயு உருளைக்கு ரூ. 100 மானியம் வழங்குவதாகவும் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
பெண்கள், விவசாயிகளுக்கு அளித்த எண்ணற்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசு அணைக் கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை 28 ஆம் தேதி காலை 10 மணிக்கு தஞ்சாவூா் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சிப் பகுதிகளில் தங்கள் வீடுகளின் முன்பு பதாகைகளை ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆா்ப்பாட்டத்தைச் சிறப்பாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக மாவட்ட அவைத் தலைவா் திருஞானசம்பந்தம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா். வைத்திலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.