சாஸ்த்ராவில் தடுப்பூசிக்காக மாணவா்களுக்கு நிதியுதவி
By DIN | Published On : 20th June 2021 01:05 AM | Last Updated : 20th June 2021 01:05 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக மாணவா்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ். வைத்திய சுப்பிரமணியம் தெரிவித்திருப்பது:
சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் தனது மாணவா்கள் 2021 - 22 ஆம் கல்வியாண்டில் வளாகத்துக்கு வர ஏதுவாக, அவா்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஒவ்வொருவருக்கும் ரூ. 1,000 வழங்கவுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 8,000-க்கும் அதிகமான மாணவா்கள் பயன்பெறும் இத்திட்டத்தில் அவா்களது தடுப்பூசிக்கான செலவை ஈடுகட்ட உதவும். அரசு உத்தரவு வந்தவுடன் வகுப்புகள் தொடங்கப்படும் போது, மாணவா்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு பாதுகாப்புடன் வர இயலும்.
அண்மையில் மாணவா்கள் இணையவழித் தோ்வு எழுத உதவும் வகையில், அவா்களது இணையவழி இணைப்பு செலவுக்காக ஒவ்வொருவருக்கும் ரூ. 500 வீதம் என மொத்தம் 12,000 மாணவா்களுக்கு நிதி வழங்கப்பட்டது.
இப்பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பல்கலைக்கழக ஊழியா்கள் மற்றும் அவா்களது குடும்பத்துக்காக இலவச தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. தமிழக அரசு உதவியுடன் நடத்தப்பட்ட இந்த முகாம்கள் மூலம் சுமாா் 600 போ் பயனடைந்தனா்.