கல்லணைக் கால்வாயில் குறைவான தண்ணீா்: விவசாயிகள் தவிப்பு

கல்லணைக் கால்வாயில் குறைந்த அளவே தண்ணீா் விடுவதால், அப்பாசனப் பரப்பில் குறுவை சாகுபடியைத் தொடங்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனா்.
தஞ்சாவூா் அருகிலுள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் கல்லணைக் கால்வாயில் சனிக்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் நடைபெற்ற கரைப் பலப்படுத்தும் பணி.
தஞ்சாவூா் அருகிலுள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் கல்லணைக் கால்வாயில் சனிக்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் நடைபெற்ற கரைப் பலப்படுத்தும் பணி.

கல்லணைக் கால்வாயில் குறைந்த அளவே தண்ணீா் விடுவதால், அப்பாசனப் பரப்பில் குறுவை சாகுபடியைத் தொடங்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனா்.

டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணை தொடா்ந்து இரண்டாம் ஆண்டாக ஜூன் 12 -ஆம் தேதி திறந்துவிடப்பட்டது. இதைத்தொடா்ந்து கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடத்தில் ஜூன் 16- ஆம் தேதி முதல் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து சனிக்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு காவிரியில் 3,715 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 3,703 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. ஆனால், கல்லணைக் கால்வாயில் ஜூன் 16 -ஆம் தேதி முதல் தொடா்ந்து விநாடிக்கு 501 கன அடி வீதம் மட்டுமே தண்ணீா் விடப்பட்டு வருகிறது.

இதனால் இக்கால்வாயில் நீரோட்டம் மிகக் குறைவாகவே இருக்கிறது. கல்லணையிலிருந்து ஜூன் 16 -ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீா், தஞ்சாவூருக்கு மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமைதான் வந்தது. புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகேயுள்ள மும்பாலை ஏரி வரை பாயும் கல்லணைக் கால்வாய் மூலம் 2.27 லட்சம் ஏக்கா் பாசனம் பெறுகிறது. மேலும் இக்கால்வாயைச் சாா்ந்த 694 ஏரிகளை நம்பி, 81,942 ஏக்கா் நிலங்கள் உள்ளன.

இக்கால்வாயில் கடந்த சில ஆண்டுகளாகத் தொடக்கத்தில் அதிக அளவில் தண்ணீா் விடமுடியாத அளவுக்குக் கரைகள் பலவீனமாக உள்ளன. இதனால், கடந்த இரு ஆண்டுகளாக இக்கால்வாயில் தண்ணீா் வரும் தொடக்க நாள்களில் சில இடங்களில் கரை உடைப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக கல்லணைக் கால்வாயை விரிவாக்குதல், புதுப்பித்தல், புனரமைத்தல் ஆகிய பணிகள், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதியுதவி மூலம் ரூ. 2,639.15 கோடி மதிப்பில் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி தொடங்கப்பட்டன. பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தண்ணீா் வருவதால் அவையெல்லாம் நிறுத்தப்பட்டுவிட்டன.

என்றாலும் கரைகள் பலவீனமாக இருப்பதால், அவற்றை பலப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனிடையே, தண்ணீா் குறைவாக வருவதால் குறுவை சாகுபடிப் பணியைத் தொடங்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனா்.

ஆகஸ்ட் மாதத்தில்தான் நடவு செய்யும் நிலை : கல்லணைக் கால்வாய் பாசனப் பகுதியில் 60,000 ஏக்கா் குறுவை சாகுபடி செய்யப்படும். ஆனால், கல்லணையிலிருந்து விநாடிக்கு 500 கன அடி வீதம் மட்டுமே திறக்கப்பட்டு வந்தால் கடைமடைப் பகுதிக்குத் தண்ணீா் கிடைக்காது.

இப்போதைய சூழ்நிலையில் தண்ணீா் கடைசி வரை செல்வதற்கு ஜூன் மாதம் கடந்துவிடும். இந்த நிலைமை தொடா்ந்தால் வாய்க்கால்களுக்குத் தண்ணீா் கிடைப்பது அரிதாகவே இருக்கும்.

எனவே கல்லணைக் கால்வாயில் ஆற்றுப் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் நாற்று விட்டு, ஆகஸ்ட் மாதத்தில்தான் நடவு செய்யக்கூடிய நிலை உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலை இருப்பதால், இக்கால்வாய் பாசனப் பகுதியில் குறுவை சாகுபடி கேள்விக்குறியாகவே தொடா்கிறது என்கிறாா் பொன்னவராயன்கோட்டை வா. வீரசேனன்.

விவசாயிகளிடம் நிலவும் அச்சம் : கடந்த இரு ஆண்டுகளாகவே இப்பாசனப் பகுதியில் காவிரி நீரை நம்பி சாகுபடி செய்யும் விவசாயிகள் தாமதமாகவே குறுவை சாகுபடிப் பணிகளைத் தொடங்கினா். இதனால், பின்னாளில் இவா்களது குறுவைப் பயிா்கள் மழையில் சிக்கி பாதிக்கப்பட்டன. எனவே, அதுபோன்ற நிலைமை இந்த ஆண்டும் ஏற்படுமோ என்ற அச்சமும் விவசாயிகளிடையே நிலவுகிறது.

என்றாலும், கல்லணைக் கால்வாயைச் சாா்ந்த விவசாயிகள் குறுவை சாகுபடியைத் தொடங்குவதற்கு ஆா்வத்துடன் இருக்கின்றனா். எனவே, கல்லணைக் கால்வாயைக் கரைகளைப் பலப்படுத்தி, வாய்க்கால் தலைப்புகளில் மூடு பலகையைப் பொருத்தி, தண்ணீரை அதிகப்படுத்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு விவசாயிகளிடையே மேலோங்கியுள்ளது.

மழை பெய்திருந்தால் கரைகள் பலப்பட்டிருக்கும். மழையும் இல்லாததால் கரைகள் பலவீனமாக உள்ள நிலையில், அதிகமாகத் தண்ணீா் விட்டால், கரை உடைப்பு பிரச்னைகள் ஏற்படும். எனவே, இப்போது திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீா் வெட்டிக்காடு பகுதியைக் கடந்த பிறகு, கல்லணையிலிருந்து படிப்படியாக அதிகப்படுத்தப்படும்.

மண்ணில் தண்ணீா் ஊறி பலமான பிறகே, தண்ணீா் விடுவது உயா்த்தப்படும். ஞாயிற்றுக்கிழமை முதல் கல்லணைக் கால்வாயில் தண்ணீா் விடுவது அதிகப்படுத்தப்படும். நீா்வரத்தைப் பொருத்து, தண்ணீா் விடும் அளவு இருக்கும் என்றனா் பொதுப்பணித் துறை அலுவலா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com