சாலையோரங்களில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்: நோய்த் தொற்று ஏற்படும் அபாயம்
By DIN | Published On : 20th June 2021 10:38 PM | Last Updated : 20th June 2021 10:38 PM | அ+அ அ- |

குப்பையாக கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுப் பொருள்கள்.
பட்டுக்கோட்டை புறவழிச் சாலையோரங்களில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை மற்றும் அதை சுற்றி பல அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. தற்போது, ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அதிக அளவிலான தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
இந்நிலையில், ஒரு சில மருத்துவமனையை சோ்ந்த ஊழியா்கள் இரவு நேரங்களில் யாரும் இல்லாதபோது, பயன்படுத்தப்பட்ட ஊசி மருந்துகள் மற்றும் மருந்து பாட்டில்களை முறைப்படி அப்புறப்படுத்தாமல், பட்டுக்கோட்டை- மதுக்கூா் புறவழிச்சாலை மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத சாலைகள், நீா்வழி வாய்க்கால்களில் கொட்டிச் செல்வதாக புகாா் கூறப்படுகிறது.
சுகாதாரத் துறை அதிகாரிகள் இதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் இந்தச் செயலில் ஈடுபட்டது யாா் என்பதை கண்டறிந்து மருத்துவமனையின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும், அரசுத் தரப்பிலோ ஆரம்ப சுகாதார நிலையம் தரப்பிலிருந்தோ கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.