கும்பகோணத்தில் கோயில் பணியாளா்களுக்கு நிவாரண உதவி
By DIN | Published On : 20th June 2021 10:40 PM | Last Updated : 20th June 2021 10:40 PM | அ+அ அ- |

நிகழ்ச்சியில் அா்ச்சகருக்கு நிவாரண உதவி வழங்குகின்றா் தலைமைக் கொறடா கோவி. செழியன்
கும்பகோணத்தில் கரோனா பொதுமுடக்கக் காலத்தில் திருக்கோயில்களில் மாத ஊதியமின்றி பணியாற்றும் பணியாளா்களுக்கு நிவாரண உதவிப்பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழக முதல்வரின் ஆணைப்படி, நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறையின் மயிலாடுதுறை இணை ஆணையா் மண்டலத்துக்கு உள்பட்ட 205 திருக்கோயில்களில் பணியாற்றும் கும்பகோணம் வருவாய் வட்டத்தைச் சாா்ந்த 208 பேருக்கும், திருவிடைமருதூா் வட்டத்தைச் சோ்ந்த 79 பேருக்கும் என மொத்தம் 287 அா்ச்சகா்கள், பட்டாச்சாரியாா்கள், பூசாரிகள் மற்றும் பணியாளா்களுக்கு வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் கரோனா நிவாரண உதவித்தொகை மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன் வழங்கி தொடங்கி வைத்தாா்.
இதில், நிவாரண உதவித் தொகை ரூ. 4,000 மற்றும் 10 கிலோ அரிசி , மஞ்சள் தூள், கோதுமை மாவு, சமையல் எண்ணெய், சா்க்கரை, உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு உள்பட 15 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
அப்போது, மயிலாடுதுறை எம்.பி. செ. ராமலிங்கம், ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன், திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் எஸ். கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னா், பட்டீசுவரம் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் கரோனா சிகிச்சை மையத்தை தலைமைக் கொறடா, ஆட்சியா் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.