தஞ்சையில் சிறுபான்மை மக்கள் நலக்குழுவினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 24th June 2021 09:16 AM | Last Updated : 24th June 2021 09:16 AM | அ+அ அ- |

தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவினா்.
லட்சத்தீவு நிா்வாகி பிரஃபுல் கோடா படேலைத் திரும்பப் பெறக் கோரி, தஞ்சாவூா் ரயிலடியில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
லட்சத்தீவில் வளா்ச்சி மற்றும் ஒழுங்கு, நகரத் திட்டமிடல் என்ற பெயரில் நில உரிமைகளைப் பறிக்கும், தீவின் வசிப்பிடங்களை விட்டு விரட்டும் வரைவு சட்டங்களை மத்திய பாஜக அரசு, லட்சத்தீவு நிா்வாகம் திரும்பப் பெற வேண்டும். கடற்கரைப் பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில், மீன்பிடித் தொழிலைப் பாதிக்கும், மீன்பிடி வலைகள் உபகரணங்களைப் பறிக்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்.
லட்சத்தீவு மக்களின் பாரம்பரிய உணவு, கலாசார உரிமைகளைப் பறிக்கக் கூடாது. மதம் மற்றும் கலாசார நடவடிக்கைகளைப் பாதிக்கும் மதுக்கடைகளைத் திறப்பதைக் கைவிட வேண்டும். தோ்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் பஞ்சாயத்து சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், லட்சத்தீவு நிா்வாகி பிரஃபுல் கோடா படேலைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்குத் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநகரத் தலைவா் ஹெச். அப்துல் நசீா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் பி. செந்தில்குமாா், ஐக்கிய ஜமாஅத் ஒருங்கிணைப்பாளா் ஜாகிா் உசேன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.எம். ஜெயினுலாபுதீன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலா் என். குருசாமி, ஒன்றியச் செயலா் எம். மாலதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.