திருவோணம் அருகே 415 நெல் மூட்டைகள் பறிமுதல்
By DIN | Published On : 24th June 2021 09:11 AM | Last Updated : 24th June 2021 09:11 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் அருகே நேரடி நெல்கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட, வியாபாரிகளுக்குச் சொந்தமான நெல் மூட்டைகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பறிமுதல் செய்யப்பட்டன.
ஒரத்தநாடு வட்டம், திருவோணம் அருகே நம்பிவயல் கிராமத்திலுள்ள அரசின் நேரடி கொள்முதல் நிலையத்துக்கு, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 2 லாரிகளில் 415 நெல் மூட்டைகளைக் கொண்டு வந்த சிலா், அதை அங்கு இறக்க முயன்றனா்.
இதையறிந்த அப்பகுதி இளைஞா்கள், வெளி வியாபாரிகள் எனக் கருதி லாரிகளை சிறைபிடித்து, திருவோணம் காவல் நிலையத்துக்குத் தகவலளித்தனா்.
தகவலின் பேரில் அங்கு விரைந்த ஒரத்தநாடு காவல் ஆய்வாளா் சுப்பரமணி, திருவோணம் காவல் நிலையத்தினா் விசாரணை நடத்தினா். ஓட்டுநா்களிடம் ஆவணங்களை சரிபாா்த்த போது, அவை உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட வியாபாரிகளின் நெல் எனத் தெரிய வந்தது.
இதைத் தொடா்ந்து இரண்டு லாரிகளையும் நெல் மூட்டைகளோடு திருவோணம் காவல் நிலையத்துக்கு காவல் துறையினா் கொண்டு சென்றனா். அப்பகுதியைச் சோ்ந்த நிசான் உள்பட 20 இளைஞா்கள் காவல் நிலையத்தில் நடவடிக்கை கோரி புகாரளித்தனா்.
தகவலின் பேரில் நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் பட்டுக்கோட்டை துணை மேலாளா் ஜாபருல்லா, திருவோணம் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகளை புதன்கிழமை பாா்வையிட்டாா். தொடா்ந்து அவா் நெல் மூட்டைகளை லாரிகளுடன் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.