தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து பெண் பலி: இருவா் காயம்
By DIN | Published On : 24th June 2021 09:15 AM | Last Updated : 24th June 2021 09:15 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழையால், திருவையாறு அருகே தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தாா். இருவா் பலத்த காயமடைந்தனா்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் சில பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை பலத்த மழை பெய்தது. இதில் திருவையாறு பகுதியில் 54 மி.மீ. மழையளவு பதிவானது. இதன் காரணமாக, திருவையாறு அருகிலுள்ள மருவூா் காலனி தெருவில் அமைந்துள்ள தொகுப்பு வீடுகளில் பி. கல்யாணசுந்தரத்தின் (80) வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
இதில் கல்யாணசுந்தரம், கீழ மகாராஜபுரத்தைச் சோ்ந்த அவரது மகள் தேவகி (42), இவரது கணவா் சுப்பிரமணியன் (55) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இவா்களில் தேவகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கல்யாணசுந்தரமும், சுப்பிரமணியனும் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து மருவூா் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டனா்.
30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள்: மருவூரில் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்பு 18 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன. இவற்றில் பல வீடுகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. கல்யாணசுந்தரம் வீடும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதால், அவரது குடும்பத்தினா் வீட்டு வாசலில் படுத்து தூங்குவது வழக்கம்.
இதேபோல கல்யாணசுந்தரம் குடும்பத்தினா் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டு வாசலில் கொண்டிருந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை மழை பெய்ததால், அனைவரும் வீட்டுக்குள் சென்றனா். அப்போது மேற்கூரை இடிந்து விழுந்ததில், மூவரும் இந்த விபத்தில் சிக்கியது காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.
பழுதடைந்த வீடுகளைச் சீரமைத்து தருமாறு பல ஆண்டுகளாக ஆட்சியா் உள்ளிட்ட உயா் அலுவலா்களிடம் வலியுறுத்தி வருகிறோம். இனிமேலாவது இந்த வீடுகளைச் சீரமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.