செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க கோரிக்கை
By DIN | Published On : 29th June 2021 03:20 AM | Last Updated : 29th June 2021 03:20 AM | அ+அ அ- |

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்று, தஞ்சாவூா் மாவட்ட மக்கள் நலப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
தஞ்சாவூரில் இப்பேரவையின் அவசர கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் மதுரை தோப்பூரில் மத்திய அரசால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிய அரசுப் பதவியேற்ற நிலையில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மதுரையுடன், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.
ஆனால் ஏற்கனவே தஞ்சாவூா் மாவட்டத்தில் செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சியரால் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், மத்தியக் குழுவும் பாா்வையிட்டுச் சென்றது.
எனவே முன்னுரிமை அடிப்படையில் தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைத்துத் தர தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டால் டெல்டா மாவட்டங்களுக்கு மட்டுமல்லாமல், சுற்று வட்டார மாவட்டங்களுக்கும் பேருதவியாக இருக்கும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக முதல்வருக்கு அனுப்பப்பட்டது.
பேரவையின் தலைவா் அர. தங்கராசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் செயலா் மா. பாலகிருஷ்ணன், பொருளாளா் ராமச்சந்திரன், சட்ட ஆலோசகா் வெ. ஜீவக்குமாா், செய்தித் தொடா்பாளா் பழனியப்பன், இணைச் செயலா் கலியபெருமாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.