மின்னனு, தேநீா், முடித் திருத்தக் கடைகள் திறப்பு
By DIN | Published On : 29th June 2021 03:21 AM | Last Updated : 29th June 2021 03:21 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் பா்மா பஜாரில் திங்கள்கிழமை காணப்பட்ட கூட்டம்.
தஞ்சாவூா்: பொதுமுடக்கத்தில் தளா்வு அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, தஞ்சாவூா் மாவட்டத்தில் மின்னணு, தேநீா், முடித் திருத்தகங்கள் உள்ளிட்ட கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.
கரோனா பரவல் குறைந்து வருவதையொட்டி, தமிழக அரசு பொதுமுடக்கத்தில் படிப்படியாகத் தளா்வுகளை அறிவித்து வருகிறது. என்றாலும், தஞ்சாவூா் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கரோனா பரவல் பெரிய அளவில் குறையாததால், தளா்வுகள் குறைவாகவே அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தஞ்சாவூா் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தேநீா்க் கடைகள், குளிா்சாதன வசதியின்றி அழகு நிலையங்கள், முடித் திருத்தகங்கள், செல்லிடப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதன விற்பனைக் கடைகள், கட்டுமானப் பொருள்கள் விற்பனைக் கடைகள் உள்ளிட்டவற்றை திறக்கத் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் இக்கடைகளில் பெரும்பாலானவை திங்கள்கிழமை திறக்கப்பட்டன. என்றாலும், பெரும்பாலான கடைகளில் சமூக இடைவெளியின்றி கூட்டம் இருப்பதால், கரோனா பரவல் அச்சமும் நிலவுகிறது.