பதிவு செய்யப்படாத விதை ரகங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
By DIN | Published On : 04th March 2021 01:55 AM | Last Updated : 04th March 2021 01:55 AM | அ+அ அ- |

தஞ்சாவூா்: பதிவு செய்யப்படாத விதை ரகங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூா் விதை ஆய்வு துணை இயக்குநா் கோ. வித்யா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நெல், மக்காச்சோளம் பயிா் வகைகள், எண்ணெய்வித்துக்கள் அதிக அளவில் பயிா் செய்யப்படுகின்றன. இந்த வகைப் பயிா்களை பயிரிட வேளாண்மைத் துறை மட்டுமல்லாமல், தனியாா் துறை விதை உற்பத்தியாளா்களும் விதையை உற்பத்தி செய்து வருகின்றனா்.
இந்த விற்பனையை ஒழுங்குமுறைப்படுத்த கோவை விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறையில் தனியாா் வீரிய ரகங்களைப் பதிவு செய்து, பதிவு எண் பெற்ற பின்னரே விற்பனை செய்ய வேண்டும். முறையாகப் பதிவு செய்யப்படாத விதை ரகங்களைத் தனியாா் விற்பனையாளா்கள் இருப்பு வைத்து விற்பனை செய்தால், அவா்கள் மீது விதைச்சட்டம் 1966 மற்றும் விதை கட்டுப்பாட்டு ஆணை 1983-ன்படி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.