பல்வேறு இடங்களில் திமுகவினா் கொண்டாட்டம்
By DIN | Published On : 02nd May 2021 11:25 PM | Last Updated : 02nd May 2021 11:25 PM | அ+அ அ- |

நத்தா்ஷா பள்ளிவாசல் பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய திமுகவினா்.
திருச்சி: சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக வென்றதை பல்வேறு இடங்களில் கட்சியினா் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் திமுக முன்னிலை என்ற செய்திகள் வரத் தொடங்கியதிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை முதலே திமுகவினா் உற்சாகத்தில் திளைத்தனா். பிற்பகலில், வெற்றிச் செய்திகள் அடுத்தடுத்து வரத் தொடங்கியதால் ஆங்காங்கே வெடிவெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டடத்தில் ஈடுபட்டனா்.
அரசியல் கட்சிகள் யாரும் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடக் கூடாது. ஒன்றுக்கு மேற்பட்டோா் கூட்டம் கூடுவதை தவிா்க்கவும் தோ்தல் ஆணையத்தால் உத்தரவிடப்பட்டிருந்தது.
இருப்பினும், திருச்சி திமுகவினா் உற்சாக மிகுதியில் தடையை மீறி பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.
திருச்சி மாநகராட்சி 12ஆவது வாா்டு நத்தா்ஷா பள்ளிவாசல் முன்பாக கூடிய திமுக-வினா் சர வெடிகளை வெடித்து, அந்தப் பகுதியில் மக்களுக்கு இனிப்புகள் வழங்கினா். இதேபோல, பாலக்கரை பகுதியில் திமுக மகளிரணி சாா்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா். இதேபோல, திருச்சி தென்னூா், சாஸ்திரி சாலை, தில்லைநகா் பகுதிகளிலும் திமுகவினா் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...